="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

28 அடகு

 

நடைபாதையில் என்ன செய்வதென்றே தெரியாமல் அவனையறியாமல் அவன் கண்களில் வழிந்துகொண்டிருந்த கண்ணீரைக்கூட துடைக்காமல் வழியவிட்டபடி நின்றிருந்தான் கண்ணன்.

அவன் வாங்கற சம்பளத்திலேகாலத்தை ஓட்டறதே கஷ்டம். இப்போ என்ன செய்யறது. இதுக்கு பணம்த்துக்கு என்னா செய்யிறது. அப்பா இறந்து போனதும் எப்படியோ இப்படி ஒரு நிலை வந்தது அவனுக்கு அப்பா இருந்த வரையில் ராணி போல் வாழ்ந்த அம்மா யதேச்சையாகக் கீழே விழுந்து கையை உடைத்துக்கொண்டு வலி தாங்காமல் முனகியபோது அம்மாவின் நிலையைக் கண்டு பதறிப் போய் கைத்தாங்கலாக எழுப்பி, நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு, மருத்துவரிடம் கூட்டிச் செல்லவேண்டும் என்பது நினைவுக்கு வரவே, நல்ல செல்வாக்கோடு வாழ்ந்துகொண்டிருந்த மூத்த அண்ணன் விஸ்வநாதனுக்கு செய்தியைச் சொல்லிவிட்டு, அவர் பதிலுக்குக் காத்திருந்தான் கண்ணன்.

எதிர்முனையில் சில வினாடிகள் மௌனம், ஓ இது வேறயா சரி அம்மாவைக் கணபதி டாக்டரிடம் அழைத்துப் போ. அவரிடம் நான் சொன்னதாகச் சொல். அவர் வைத்தியம் செய்வார். அவருக்கு நான் பணம் கொடுத்து விடுகிறேன். எனக்கு முக்கியமான வேலை இருக்கு என்று வந்த பதிலைக் கேட்டவுடன் எப்படி அண்ணனால் இப்படி பதற்றமே இல்லாமல் இருக்க முடிகிறது, என்று யோசித்துக்கொண்டே சரி அண்ணா, நான் கூட்டிப் போகிறேன் என்று போனை வைத்துவிட்டு, மிகப் பழையதான தன்னுடைய ராஜ்தூத் வண்டியில் அம்மாவை உட்காரவைத்து மருத்துவரிடம் அழைத்து வந்து காட்டியதும் அவர் அம்மாவைப் பார்த்துவிட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றதும் பகீர் என்றது கண்ணனுக்கு.

சரி உங்க அண்ணன் விஸ்வநாதன் சொல்லி இருக்கார். இன்னிக்கே அட்மிட் பண்ணிடுங்க. அறுவை சிகிச்சை செய்யலாம் என்றார் டாக்டர் கணபதி.. அறுவை சிகிச்சையும் முடிந்து, மருத்துவமனையில் இரண்டு நாட்கள் ஒடிப்போயின.

அன்று அம்மாவை வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என்று சொல்லிவிட்டார்கள். பணம் கட்டும் இடத்தில் மொத்தம் எட்டாயிரம் ரூபாய் ஆகியிருக்கிறது. பணம் கட்டுங்கள். வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என்று சொன்னதும் “இல்லே என் அண்ணன் வந்து பணம் கட்டுவார். டாக்டர்கிட்ட பேசி இருக்கார் என்ற என்னை அற்பப் புழுவைப் பார்ப்பது போல் பார்த்த காசாளர் டாக்டரிடம் இண்டர்காமில் பேசினார். டாக்டர் என்ன சொன்னாரோ தெரியவில்லை, இல்லே உடனே பணம் கட்டுங்க. அப்போதான் அனுப்ப முடியும் என்றார் காசாளர்.

அம்மா பலகீனமாக எப்போ வீட்டுக்கு போகலாம் எவ்ளோடா பணம் கட்டணும் என்றாள். அம்மா அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ கவலைப்படாதே என்று கூறிவிட்டு அண்ணனுக்கு போன் செய்தான். மணி அடித்தது. ஹலோ யாரு என்று விஸ்வநாதனின் குரல் கேட்டது. அண்ணா என்று ஆரம்பித்தான் கண்ணன். தொலைபேசித் தொடர்பு அறுந்து போனது. அறுந்தது தொலைபேசி இணைப்பு மட்டுமல்ல என்று அண்ணா தொலைபேசியின் ரிசீவரை வைத்ததிலிருந்தே புரிந்தது.

என்ன செய்வது என்றே தெரியாமல் நேராக டாக்டர் கணபதி இருக்கும் அறைக்குச் சென்று டாக்டர அண்ணன் வந்து பணம் கட்டுவாரு இன்னிக்கு வீட்டுக்குப் போகணும் என்றான் கண்ணன், உடனே டாக்டர் கணபதி இங்க என்ன நாங்க தர்ம சத்திரமா நடத்தறோம். உங்க அண்ணன் சொன்னாரு. ஆனா பணம் கட்டலே, அதனாலே பணம் கட்டிட்டுக் கூட்டிக்கிட்டு போங்க என்றார்.

நடைபாதையில் நின்று கலங்கிகொண்டிருந்த கண்ணனுக்கு ஒரு யோசனை தோன்றியது. பேசாம தன்னோட ராஜ்தூத்தை அடகு வைத்துவிட்டு அம்மாவை அழைத்துக்கொண்டு போகலாம் என்று தோன்றியது, அம்மா கேப்பாங்களே எங்க போச்சு வண்டீன்னு என்ன பதில் சொல்றது பொய் சொல்லிப் பழக்கமும் இல்லே. அது மட்டுமில்லே. அம்மாவும் சேர்ந்து வருத்தப்படுவாளே என்று நினைத்தவனுக்கு அவனறியாமல் கண்ணீர் வழிந்தது.

வேற வழியே இல்லே. அடகுக் கடைக்குச் சென்று ராஜ்தூத் வண்டியை அடகு வைக்க, அந்த அடகுக் கடைக்காரரை அழைத்து தன் வண்டியைக் காட்டினான் கண்ணன். அடகுக்கடைக்காரர் வண்டியைப் பார்க்காமல் கண்ணனையே பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று, நீங்கோ ராஜகோபாலனோட பிள்ளேயா?” என்றார். ஆமாம் எப்படி கண்டுபிடிச்சீங்க என்றான் கண்ணன்.

அப்பிடியே உங்க அப்பாவை மாதிரியே இருக்கீங்கோ. மறுபடியும் உங்க அப்பாவைப் பாக்கறாப் போலே இருக்குது. மனசு சந்தோஷமா இருக்குது. உங்க அப்பா எப்படி வாழ்ந்தவரு எத்தினி பேருக்கு உதவி பண்ணியிருக்காரு அதெல்லாம் மறக்கலே. நல்ல மனுஷன். நான் இப்போ நல்ல நெலமையிலே இருக்கறதுக்கு உங்க அப்பாதான் காரணம். அதெல்லாம் பழைய கதை. நானு பணம் தரேன். உங்க வண்டி நீங்களே எடுத்துப் போங்கோ. நிதானமா பணம் குடுங்கோ என்றார் வட்டிக் கடைக்காரர்.
நீங்கோ எனக்கு ஒரு சத்தியம் செய்யணும் செய்றீங்களா இனிமே எந்தக் காரணத்துக்காகவும் அடகுக் கடைக்கு வரக்கூடாது என்றார். கண்ணன் அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு, இல்லே சேட் இல்லே இனிமே அடகுக் கடைக்கு வரவே மாட்டேன் இந்தப் பணத்தை கூடிய மட்டும் சீக்கிறமா குடுத்துடறேன் நீங்க செய்த உதவிக்கு நன்றி என்றான் கண்ணன். நடைபாதையில் நின்று கண்களில் நீர்வழிய நின்றிருந்தான் கண்ணன். இது வேறு கண்ணீர்!

 

License

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *