48 ஆசை மச்சான்

தினமும் சாராயத்தை குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் எதுவுமே பேசாமல் போதையில் மயங்கிக் கிடந்துவிட்டு மீண்டும் மறுநாள் பொறுப்பாக வேலைக்குச் சென்று மாலையில் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்துக்கொண்டிருக்கும் புருஷன் மாரியப்பனிடம் வேண்டாய்யா நாம் நம்ம புள்ளைகளை வளத்து ஆளாக்கி அதுங்களையாவது படிக்க வெச்சு முன்னுக்குக் கொண்டு வரணும் அதுங்களும் நம்மளை மாதிரியே அன்னாடங் காச்சியா இருக்கக் கூடாதுய்யா இப்பிடி தினோம் குடிச்சிக்கிட்டே இருந்தா எப்பிடியா இதுங்களை வளத்து ஆளாக்க முடியும் என்றாள் அஞ்சலை .

என்னா செய்யச் சொல்றே எனக்கும் புரியுது ஆனா வேலை செஞ்சிட்டு உடம்பு ஓஞ்சி போகுது உடம்பெல்லாம் வலிக்குது அதை மறந்து தூங்கினாத்தானே மறா நாள் வேலைக்கு போவ முடியும், அதான் இந்தக் கண்றாவியைக் குடிச்சி புட்டு தூங்கறேன் என்ற புருஷனை பரிதாபமாகப் பார்த்தாள் அஞ்சலை

மறுநாள் வழக்கம் போல கையில் பணம் பற்றாக்குறையால் அளவோடு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மாரியப்பனின் காதில் அஞ்சலையின் தீனமான குரல் கேட்டது . என்னை விடுயா என் புருஷன் வந்தா உன்னையக் கொன்னே போட்டுடுவான். மரியாதையா என்னைய விட்று என்று கதறிக் கொண்டிருந்தாள் அஞ்சலை.

அவளை வலுக்கட்டாயமாக கட்டி அணைத்துக்கொண்டிருந்த பழனி அவளை விடாமல் தொந்தரவு செய்வதை பார்த்த மாரியப்பன் குண்டுக்கட்டாக அவனைத் தூக்கி எறிந்தான். போய் விழுந்த வேகத்தில் அப்படியே தலையில் அடி பட்டு மயங்கிப் போனான் பழனி, மற்ற குடிசைக்காரர்கள், அவனை தூக்கிக்கொண்டு போய் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

மாரியப்பன் அஞ்சலையிடம் வந்து கவலைப்படாதே புள்ளே நானு இருக்குறேன் ஒரு பய இனிமே உங்கிட்ட நெருங்க முடியாது என்ன மன்னிச்சுக்க அஞ்சலை நான் குடிச்சுட்டு இப்பிடி இருக்கறதாலதானே இது மாதிரி மொள்ளமாரிக்கெல்லாம் உன் மேலேயே கைவைக்க துணிச்சல் வருது.
இனிமே குடிக்கவே மாட்டேன் இது ஆத்தா மேல சத்தியம் நம்ம குழந்தைங்க மேல சத்தியம் என்று கதறினான் மாரியப்பன்.

மறுநாள் வேலையை முடித்துவிட்டு முகத்தைக் கழுவிக்கொண்டிருந்த மாரியப்பனிடம் என்னா மச்சான் இன்னா இன்னிக்கு குடிக்க வரலியா ஏதோ குடிக்க மாட்டேன்னு சத்தியம் செஞ்சிட்டேன்னு கேள்விப்பட்டேன், அதெல்லாம் ஒண்ணும் கவபடாதே மச்சான் அப்பிடித்தான் பொம்பளைங்க பயமுறுத்துவாளுக அவுங்களுக்கு என்னா தெரியும் நம் கஷ்டம் என்றான் குடிகார சகா பெருமாள் அவனை மச்சான் என்று பெருமாள் அழைத்தது மனதுக்கு இதமாக இருந்தது.

மாரியப்பனின் நாவு அந்த சாராயத்துக்காக ஏங்கியது,ஆமாம் ,பெருமாள் சொல்றதும் சரிதானே இவங்களுக்கு என்னா தெரியும்
நாம படற கஷ்டம் அடப்போ சத்தியமாவது மண்ணாங்கட்டியாவது
சாராய போதை சுகத்துக்கு முன்னாலே அவன் கால்கள் தானாக நடக்கத் தொடங்கின சாராயக் கடையை நோக்கி.

கடைக்குச் செல்லும் வழியில் பெருமாள் அவனை இன்னும் கொஞ்சம் உசுப்பும் விதமாக ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா
நீ அடிச்சிப் போட்டியே அந்தப் பழனியைப் பாக்கப் போயிருக்கா உம் பொண்டாட்டி அஞ்சலை. அந்தப் பழனி தானே உம் பொண்டாட்டியை கெடுக்கப் பாத்தான் அவனைப் போயி இவ எதுக்கு பாக்கோணும் இது எனக்கு ஒண்ணும் சரியா படலை என்றான்.

அதிர்ந்து போன மாரியப்பன் இவளுக்கு அவன்கிட்ட என்னா வேலை ,
எதுக்கு இவ அவனைப் பாக்கப் போனா சாராயம் குடிக்காமலே ஆத்திரம் தலைக்கேற அந்த மருத்துவ மனையை நோக்கி அறிவாளோடு ஒடினான் மாரியப்பன். அங்கே அஞ்சலை பழனியிடம் அண்ணாத்தை என்ன மன்னிச்சிடு. என் புருஷனை திருத்த எனக்கு வேற வழி தெரியலை, அதுனாலேதான் உன்னிய நான் அப்பிடி நடிக்கச் சொன்னேன். பாவம் எனக்காக நீ அடி வாங்கி படுத்திருக்கே என்றாள்.

அத்த வுடு தங்கச்சி இப்போ உன் புருஷன் குடிக்காம இருக்கானா அது போதும் இப்பிடித்தான் போன மாசம் என் தங்கச்சியோட புருஷன் குடிச்சு குடிச்சே குடலு வெந்து செத்துப் பூட்டான். இப்போ அந்தக் குழந்தைகளும் அவளும் தடுமாறிகிட்டு இருக்காங்க அது மாதிரி உன் வாழ்க்கையும் ஆகக் கூடாதுன்னுதானே நான் அடி வாங்கினேன் என்றான் பழனி.

இதைக் கேட்ட மாரியப்பனுக்கு அவனுடைய ஆத்திரமெல்லாம் ஒரு நொடியில் அப்படியே காற்று போன பலூனாக வடிந்தது. அறிவு விழித்துக் கொள்ள ஆரம்பித்தது, அவன் மயக்கம் தீர்ந்து உளமாற புரிந்துகொண்டு மடை திறந்த வெள்ளம் போல் கண்ணிலிருந்து வழியும் நீரை நிறுத்த வழி தெரியாமல் திகைத்து நின்றான் மாரியப்பன்.

பழனீ என்னிய மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லு பழனீ என்று தன் காலில் விழுந்து கதறிக்கொண்டிருக்கும் மாரியப்பனை பழனி அப்படியே தூக்கி அணைத்துக்கொண்டு மச்சான் கடலுக்கு மீன் பிடிக்கப் போறவங்க கூட இடுப்புக் கயித்தை மச்சானை நம்பித்தான் குடுப்பாங்க, என்னிய நம்பு மச்சான் நான் உனக்கு த்ரோகம் செய்யமாட்டேன் என்றான் .மாரியப்பன் கண்ணிலிருந்து அது வரை அவன் குடித்த சாராயமெல்லாம் பாவ மன்னிப்பாக வழிந்து கொண்டிருந்தது .

குழந்தை ராசு அம்மா ஏம்மா அப்பா அழுவுறாரு
குடிக்க காசில்லையா அதுனாலே அழுவுறாரா என்றான்
அஞ்சலை மாரியப்பனையே கண்ணில் நீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள் குழந்தையை அப்படியே அள்ளி அஞ்சலையையும் பழனியையும் சேர்த்து அணைத்துக்கொண்டு அதில்லடா ராசு உங்க அம்மாவுக்கு ஒரு நல்ல அண்ணனும்
எனக்கு ஒரு நல்ல மச்சானும் உனக்கு ஒரு மாமனும் கெடைச்சிருக்கான். அதுனாலே சந்தோஷமா சிரிச்சேன் அழுவலைகண்ணு என்றாள்.

அழுதா மட்டும் இல்லேடா சிரிச்சாலும் கண்ணீர் வரும் அதான் கண்ணுலே தண்ணி வருது என்றான் மாரியப்பன்.
இனி ஒரு சொட்டு சாராயமும் அவன் உள்ளே போகாது

” உணர்ந்த உள்ளம் வடிக்கும் கண்ணீரை மீண்டும் கண்வழியே உள்ளத்திற்கு அனுப்ப யாரும் இது வரை பிறக்கவே இல்லை ”

 

சுபம்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *