24 ஆபரேஷன் சக்சஸ்

 

டெட்டாலின் நெடி மூக்கைத் துளைத்தது. மருத்துவ மனைக்கே உண்டான சூழ்நிலை பயமுறுத்தியது. பலர் பச்சை வண்ண உடையுடன் உள்ளேயும் வெளியேயும் போய்வந்துகொண்டிருந்தனர். ஒரு நோயாளி ஸ்ட்ரெக்சரில் அம்மா வலிக்குதே என்று முனகியபடி இருந்தார். அவரை ஸ்ட்ரெக்சரில் வைத்து ஒருவர் சலைன் வாட்டர் பாட்டிலைத் தூக்கிப் பிடித்தபடி மற்றொருவர் வண்டியைத் தள்ளியபடி போனார். அந்த நோயாளியின் உறவினர்கள் அவரையே கவலையுடன் பார்த்துக்கொண்டே கூடவே நடந்து சென்றனர்.

கண்களில் திகிலுடன் பேசிக்கொண்டிருந்தாள் காமாக்ஷி, ஏழு வருஷத்துக்கு முன்னயே நான் சொன்னேன் வேண்டாம் வேண்டாம்னு. இவர் கேக்கலை. விடாப்பிடியா, பயப்படறதுக்கு ஒண்ணும் இல்லே. இப்போல்லாம் இதெல்லாம் ரொம்ப சகஜமாயிடுத்து. இப்போ விஞ்ஞானம் இருக்கு. நவீனக் கருவியெல்லாம் வந்தாச்சு. இந்தக் காலத்திலே போயி இப்பிடி பயந்தா என்ன செய்யிறது .

இது மாதிரி எல்லாரும் பயந்துண்டே இருந்தா, எப்படி மக்களுக்கு ஒரு தெளிவு வரும் இது மாதிரியெல்லாம் புதுசு புதுசா செய்ய ஆரம்பிச்சாதானே அதுலே என்ன விளைவுன்னு தெரியும் ஒரு வகையிலே இது எவ்வளவோ மக்களைக் காப்பாத்தப் போற ஒரு புது கண்டுபிடிப்பா கூட இருக்கலாம். எல்லாருக்கும் உதவி செய்யமுடியும். ஒரு வகையிலே பாத்தா இது பொது ஜனசேவை அப்பிடீ இப்பிடீன்னு ஏதேதோ சொல்லி என் மனசை மாத்திட்டாரு இன்னிக்கு நான் பயந்துண்டு இருக்கேன். எல்லாம் இவரால வந்துது. புலம்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் காமாக்ஷி.

அவளையே கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் காமாக்ஷியின் கணவர் ராஜசேகர் உள்ளே அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கிறது. ’நாலு மணி நேரத்திலே அறுவை சிகிச்சை முடிஞ்சிரும், கவலைப்படாதீங்க என்று கூறிவிட்டு, அறுவை சிகிச்சை அறைக்குள் போய் ஆறு மணி நேரம் ஆச்சு, இன்னும் வெளியே வரலை. மாத்தி மாத்தி நர்ஸெல்லாம் வந்து வந்து போயிண்டே இருக்கா.

யாரைக் கேட்டாலும் பதில் ஒண்ணும் சொல்லாம நீங்க தைரியமா அங்கே போயி உக்காருங்க. எங்க டாக்டர் நல்ல திறமையானவர். நிச்சயமா அறுவை சிகிச்சை வெற்றிகரமா செய்வாரு. அதுனாலே கவலைப்படாதீங்க. நாங்கல்லாம் கூட இருக்கோம் அவர் பக்கத்திலே அப்பிடீன்னு சொல்லிட்டுப் போயிண்டே இருக்கா,’
அறுவை சிகிச்சை நடக்கும் அறையின் வாசலையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் காமாக்ஷி. அறுவை சிகிச்சை செய்யும் அறையின் கதவு திறந்தது. டாக்டர் நரேன் கைகளைத் துடைத்தபடி, நெற்றி வியர்வையைத் துடைத்தபடி வந்தார்.

அவருக்கு முன்னால் நர்ஸ் எல்லாம் நல்லபடியா நடந்திடிச்சு. நோயாளி நல்லா இருக்காரு. ஆபரேஷன் சக்ஸஸ் என்று சக நர்ஸிடம் கூறினாள். காமாக்ஷி கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் நான் வேண்டாத தெய்வமில்லே. நல்லபடியா முடிஞ்சுதே, பகவானே. உனக்கு நன்றி என்றாள்.

அம்மா அப்பா உங்க ரெண்டு பேர் ஆசீர்வாதத்தாலே நானும் மருத்துவப் பட்டப் படிப்பு படிச்சு, இன்னிக்கு முதன் முதலா ஒரு பெரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமா செஞ்சுட்டேன். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ’ என்றபடி டாக்டர் நரேன், நேராக வந்து காமாக்ஷி ராஜசேகர் இருவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். நோயாளியின் உறவினர்கள் டாக்டர் நரேனுக்கு நன்றி கூறினார்கள்.
 

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *