10 இலவச மருத்துவம்

” இலவச மருத்துவம் ”

அந்த புகழ் பெற்ற மருத்துவ மனையின் திறப்பு விழா, அதுவும் எங்கள் பகுதியில். திறப்பு விழா முதல் நாள் அன்று வருவோருக்கு வைத்தியம் இலவசம் என்று ஒரு அறிவிப்பு வேறு! போய்ப் பார்க்கலாம் சிறிது நாட்களாகவே தலை வலி வந்துகொண்டே இருக்கிறது.
குறிப்பிட்ட நாள் அன்று அந்த மருத்துவ மனையின் திறப்பு விழாவுக்கு போனேன்.இலவசம் என்று அறிவித்தாலே உடனே கூடும் கூட்டம்,அதற்கு ஏற்றார்ப்போல மருத்துவ மனை அருகே மக்கள் கூட்டம். அங்கே போகும் வழி நெடுக சுத்தம் செய்து சுண்ணாம்பு போட்டு வைத்திருந்தார்கள். மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இதே போல் எல்லா நாட்களிலும் பராமரித்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
யாரோ மந்திரி வந்து திறந்து வைக்கப் போகிறார் என்று ஒலி பெருக்கியில் அறிவிப்பு அளித்துக்கொண்டே இருந்தார்கள். அந்த மந்திரி வந்து திறக்கும் வரை பொது மக்கள் அமைதி காக்கும் படி வேண்டிக்கொண்டிருந்தார்கள். மக்கள் முண்டியடித்துக்கொண்டு முன்னேறிக்கொண்டிருந்தார்கள் (வாழ்க்கையில் அல்ல) மருத்துவ மனையை
நோக்கி. கூட்டம் அலை மோதியது. வரிசையாக கார்கள் சைரன் ஒலியோடு முழங்கியபடி வந்து நின்றது. ஒரு காரிலிருந்து மந்திரி இறங்கினார். ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டு மலர்கள் தூவப்பட்டஇடத்தில் மந்திரி இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க என்று சொல்லும்படியாக நிதானமாக நடந்து கொண்டிருந்தார்.
மக்கள் கல்லிலும் பள்ளத்திலும் மேட்டிலும் அவதிப்பட்டாலும் தங்கள் கஷ்டங்களைப் பாராமல் மந்திரியைப் பார்க்கும் ஆர்வம் மிகுதியால் ந்திரியைப் பார்க்க முண்டியடித்தனர், மந்திரி மருத்துவ மனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மக்கள் கரகோஷம் செய்தனர்.
மீண்டும் மந்திரி காரில் ஏறிக்கொள்ள அதே சைரன் ஒலியோடு கார்கள் விரைந்தன,காணாமல் போயின. ரத்தினக் கம்பளம் சுருட்டி வைக்கப்பட்டது பத்திரமாய், அது வரை மக்கள் வெள்ளம் உள்ளே வராமல் இருக்க காவல் துறையினர் மிகக் கவனமாக தடுப்புகளிப் போட்டு மக்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர் . மருத்துவ மனையின் உரிமையாளரிடமிருந்து வந்த செல்போன் செய்தியினால் காவல் துறை அதிகாரி தன் ஆட்களுக்கு சமிக்ஞை செய்தார் விலகலாம் என்று ,காவல் துறை விலகியது, கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்து ஆரவாரமாய்க் குரல் கொடுத்துக்கொண்டே ஓடியது.

சற்று நேரத்தில் வயதானவர்கள் பெண்மணிகள் குழந்தைகள் போன்றோர் கீழே விழுந்தனர் மக்கள் கூட்டத்தால் மதங்கொண்ட யானைக் கூட்டத்தினால் மிதிக்கப் படுவது போல மிதி பட்டனர். ஆங்காங்கே மக்களின் அவலக் குரல், ஓலமாய் வீறிட்டது, பலர் இறந்து போயினர், பலர் கைகால்கள் உடைந்தது சிறு குழந்தைகள் மூச்சு விடமுடியாமல் திணறி இறந்தனர்.
மருத்துவ மனையின் உள்ளிருந்து பல தாதியர் ஓடி வந்து அடிபட்டோரையெல்லாம் தூக்கிச் சென்று உடனடி மருத்துவம் இலவசமாக அளித்தனர். இறந்து போனவர்களுக்கு இலவசமாகவே சான்றிதழ்களும், கொண்டு செல்ல வாகனங்களும் இலவசமாகவே ஏற்பாடு செய்யப்பட்டது.
நான் இந்தக் காட்சியெல்லாம் என் காமிராவில் பதிப்பிக்க முயன்றேன் அப்போது காணாமல் போயிருந்த ஒரு காவல்காரர் என் காமிராவை பிடுங்கி தூக்கிப் போட்டு காலால் மிதித்து உடைத்துவிட்டு, என்னையும் அவர் லத்திக்கம்பால் ஒரு போடு போட்டார். நினைவிழந்தேன், கண் விழித்துப் பார்த்த போது என் மனைவி என் அருகே கவலையுடன் அமர்ந்திருந்தாள்.
அந்த புகழ் பெற்ற மருத்துவ மனையின் குளிர் சாதன அறையில் என் காயங்களுக்கும் மருத்துவம் செய்து படுக்க வைத்திருந்தனர். மனதுக்குள் ஆத்திரம் பொங்கியது, எப்படியாவது இந்தச் செய்தியை பத்திரிகைகளுக்கு அளிக்க வேண்டும், மக்களிப்படியெல்லாம் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு தங்களின் பொன்னான எதிர்காலத்தையும் ,உயிரையும்கூட இழக்கிறார்களே இது மிகவும் தவறு என்று பத்திரிகைகள் மூலமாக மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்னும் எண்ணத்தில். ஒரு பத்திரிகைக்காரரை செல் போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் சொன்னார் சார் ஏற்கெனவே செய்தி போட்டுட்டோமே படிச்சுப் பாருங்க சார் என்றார்.
பக்கத்தில் இருந்த பல பத்திரிகைகளை எடுத்துப் படுத்துப் பார்த்தேன்
அனைத்துப் பத்திரிகைகளிலும் கொட்டை எழுத்தில்

தர்மவான் தர்மலிங்கம் மருத்துவ மனை திறப்பு விழா கோலாகலம்

இலவச மருத்துவ உதவியால் மக்கள் மகிழ்ச்சி”

மக்கள் தர்மலிங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்

என்று படித்துவிட்டு மீண்டும் மயங்கினேன்.

அன்புடன்
தமிழ்த்தேனீ

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *