2 உயிர் மாற்றம்

 

 

இரவு 8 மணிக்கு வந்த மருத்துவர் சாரதாவைத் தனியே அழைத்து நாளைக்கு உங்கள் கணவருக்கு அறுவை சிகிச்சை. ஏற்கெனவே நான் சொன்னாமாதிரி அவருடைய மூளையில் இருக்கும் கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக நீக்கணும் . இல்லையென்றால் சுய நினைவு இழக்க அதிக வாய்ப்பு இருக்கு . எங்களால் முடிந்த அளவு முயல்கிறோம் மற்ற விவரங்களைத் தலைமைச் செவிலி சொல்லுவாங்க. காலை 6 மணிக்கு அவரை  அறுவை சிகிச்சைக்கு அழைச்சிட்டுப் போவாங்க என்று சொல்லிவிட்டுப் போனார்.

ஓய்ந்து போய் உட்கார்ந்தாள் சாரதா. இரவு மணி 12 அப்போதும் தூக்கம் வராமல் விழித்துக்கொண்டு படுத்திருந்த கண்ணன் கவலை காரணமாக அசந்து போயிருந்த  மனைவி சாரதாவைப் பார்த்தார். பாவம் இவள் என்ன செய்வாள்.   சாரதா நீ படுத்துக்கோம்மா நான் ஏதாவது வேணும்னா கூப்பிடறேன் என்றார். சரி என்று சொல்லிவிட்டுச் சாரதா படுத்துக்கொண்டாள். அவள் மனம் எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக்கொண்டே இருந்தது.

தலையணைக்கு அடியில் இருந்த ஒரு சிறிய பழைய புகைப்படம் கண்ணாடி போட்டு பிரேம் போட்டது அதை எடுத்து கையில் வைத்துக்கொண்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தார் கண்ணன். அவர் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. ஆமாம் அந்தப் புகைப்படத்தில் இருப்பவள்  அவருடைய தெய்வம் மூத்த சகோதரி ராஜாமணி. பூஜை அறையில் இருக்கும் தெய்வத் திரு உருவப் படங்களுக்கு இடையே சுமார்  45 வருட காலமாக வைத்து, தினமும் வணங்கி வரும் அவருடைய சகோதரி ராஜாமணியின் புகைப்படம். மருத்துவ மனைக்கு வரும்போது மறக்காமல்  அந்தப் புகைப்படத்தைக் கையோடு கொண்டு வந்து தலையணைக்கு அடியில் வைத்திருந்தார். அந்தப் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவருக்கு அந்தத் தெய்வீக நாள் நினைவுக்கு வந்தது!

அவருக்கு சுமார் எட்டு வயதிருக்கும் அவருடைய சகோதரி ராஜாமணிக்குச் சுமார் 12 வயது. மூன்றாம் முறை திருப்பிக்கொண்ட டைபாய்ட் ஜுரம் வந்து கண்ணன் மிகவும் நலிந்து போயிருந்த நேரம். அவ்வப்போது நினைவு வருவதும் போவதுமாக இருந்தது அவர் பிழைப்பது கடினம் என்று திட்டவட்டமா எல்லா மருத்துவரும் சொல்லியாச்சு . அன்று மருத்துவமனையில் அவர் படுத்திருந்த போது அம்மாவும் அப்பாவும் கவலையோடு உட்கார்ந்திருந்தனர்.  ஒரு முறை சற்று தெளிவு வந்தபோது, அவரை மடியில் படுக்க வைத்துக்கொண்டு ராஜாமணி கைகளைக் கூப்பி, மானசீகமாக இறைவனை வேண்டிக்கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் அவர் மேல் சொட்டிக்கொண்டிருந்தது. அவள் வாய் முணுமுணுக்கும் வேண்டுதல் இறைவன் காதில் விழுந்ததோ என்னவோ அவர் காதில் விழுந்துகொண்டிருந்தது.

பெருமாளே என் தம்பியைக் காப்பாத்து, என்னை எடுத்துக்கோ,! என் தம்பியைக் காப்பாத்து, என்னை எடுத்துக்கோ! என் தம்பியைக் காப்பாத்து,  என்னை எடுத்துக்கோ!” வேண்டிக்கொண்டே இருந்தாள் ராஜாமணி.   திடீரென்று நன்றாக இருந்த அவளுக்கு வலிப்பு வந்து அவள் மயங்கிக் கீழே விழுந்தாள். அவளுக்கு உடனடியாக வைத்தியம் செய்ய அவளைப் படுக்கைத் தள்ளுவண்டியில் (ஸ்ட்ரெக்சரில்) போட்டு அவசர வைத்தியப் பிரிவுக்கு எடுத்துச் சென்றனர். சில வினாடிகளில் அப்பாவும் அம்மாவும் கதறிக்கொண்டிருப்பது காதிலே விழுந்தாலும் எழுந்து போய் என்ன நடந்தது என்று பார்க்க முடியாத நிலை.

அம்மாவும் அப்பாவும் ஓடி வந்து டேய் ராஜாமணி நம்மையெல்லாம் விட்டுட்டுப் போய்ட்டாடா , நீ பிழைக்க மாட்டேன்னு பயந்திண்டு இருந்தோம். நல்லா இருந்த அவ போயிடுவான்னு நினைக்கவே இல்லையே என்று கதறியவுடனே அவருக்குப் புரிந்தது. அவளுடைய வேண்டுதல், அந்தப் பெருமாளையும் அசைத்து உருக வைத்தது விட்டது என்று.  ‘அடடா ஒரு உயிரைக் கூட தானமாக அளிக்க முடியுமா? அதுவும் மனப்பூர்வமான வேண்டுதல் மூலமாக வரும் கண்ணீரின் வழியாக ஒரு பாலம் அமைத்து, அந்த உணர்வுப் பாலத்தின் வழியாக உயிர் மாற்றம் செய்ய முடியுமா இன்னொரு உடலுக்குள்?

முடிந்ததே அவர் சகோதரியால்! என்ன ஓர் உருக்கமான வேண்டுதல். சித்தர்களாலும் ஞானிகளாலும் கூட முடியாத ஒரு உயிர்மாற்று வித்தையை எவ்வளவு எளிதாகச் சாதித்துவிட்டாள் அவர் சகோதரி ராஜாமணி? மருத்துவர்களே ஆச்சாரியப்பட்டனர், அவர்களுக்குத் தெரியுமா? அவர் உடலில் இயங்கிக்கொண்டிருப்பது அவருடைய சகோதரி  ராஜாமணியின் உயிர் என்று? அப்படிப்பட்ட உயிர்ச் சகோதரி ராஜாமணியின் புகைப்படத்தைக் கையில் வைத்துக்கொண்டு உருகிக்கொண்டிருந்தார் கண்ணன்! பார்த்துக்கொண்டிருக்கும் போதே கை நடுக்கத்தாலோ உணர்ச்சி வேகத்தாலோ  அந்தப் புகைப்படம் தவறிக் கீழே விழுந்தது.

அதை எடுக்கக் குனிந்த கண்ணனும் கீழே விழுந்தார். கீழே விழுந்த அவர் தலையில் என்ன பட்டதென்றே தெரியவில்லை தலையிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது கண்ணன் மயங்கினார் சாரதா சத்தம் கேட்டு, ஓடி வந்தாள்.  தெய்வமே இவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே யாராவது ஓடிவாங்களேன் என்று கதறினாள்  மருத்துவர்கள் ஓடி வந்தனர். கீழே கிடந்த கண்ணனைப் படுக்கைத் தள்ளுவண்டியில் வைத்து அவசர சிகிச்சைப் பகுதிக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அந்த அறுவை சிகிச்சை அறைக்குள் அவர் உயிரைத் தக்கவைக்க போராடிக்கொண்டிருந்தனர் மண்டையில் பலமாக அடி பட்டிருந்தது.

சாரதா ராஜாமணியின் புகைப்படத்தை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு தெய்வமே எப்பிடியாவது அவரைக் காப்பாத்து என்று கண்களில் கண்ணீருடன் வேண்டிக்கொண்டே உட்கார்ந்திருந்தாள்.   நான்கு நாட்கள் நினைவில்லாமல் இருந்த அவருக்கு நினைவு வந்த போது மசமசப்பாக மனைவி சாரதாவின் உருவம் மங்கலாகத் தெரிந்தது.   சிறிது சிறிதாக நினைவு வந்தது. மருத்துவர்கள் அவரையே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.   மீண்டும்  முழுவதுமாக நினைவு வந்த போது சாரதா சொன்னாள்.

இந்த முறையும் உங்களை உங்க ராஜாமணி காப்பாத்திட்டாங்க. அவங்கதான் தெய்வம். தெய்வம் மனுஷ்ய ரூபேணான்னு சொல்வாங்களே, அதே மாதிரி  உங்க ராஜாமணி தெய்வமா இருந்து உங்களைக் காப்பாத்திட்டாங்க!  “ஆமாங்க டாக்டருங்களே ஆச்சரியப்பட்டாங்க மண்டையிலே அடிபட்ட போது உங்க மூளையிலே இருந்த கட்டி தானாவே உடைஞ்சு போயிடுத்துங்க. அதிலே ஆச்சரியமே உங்களுக்கு வேற  எங்கேயுமே அடிபடலை. இனிமே தானா குணமாயிடும்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க என்றாள் சாரதா.

அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது அவள் கையில் ராஜாமணியின் படம்!  ராஜாமணி! உயிரை மட்டும்தான் நீ எனக்குக் குடுத்தேன்னு நான் நெனைச்சிண்டு இருந்தேன். இந்த உடம்பும் உன்னோடதுதான் எல்லாமே உன்னோடதுதான். அது இப்போதான் எனக்குப் புரிஞ்சுது என்று மனத்துக்குள் கதறினார் கண்ணன்.     அவர் கண்களில் கண்ணீர்! இது ஆனந்தக் கண்ணீரா? இல்லை, ஆத்ம சமர்ப்பணம்.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *