42

 

ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவனை யாரோ மலை உச்சியில் இருந்து
உருட்டிவிட்டாற் போல திடுக்கிட்டு எழுந்த ராகவன்
கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு சுதாரித்துக் கொண்டு மணியைப் பார்த்த போது,விடியற்காலை மணி 5.30.

விடிகாலைக் கனவுகள் அப்படியே பலிக்கும் என்று யாரோ சொன்னது ஞாபகம் வந்தது. பதறிப் போனான் ராகவன். அதே யோசனையோடு படுக்கையை சுருட்டி வைத்துவிட்டு எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு மனதிலிருந்து நீங்காத அந்த விபரீதக் கனவை அசை போடத் துவங்கினான்.

பேருந்துப் பயணத்திலும் அலுவலகம் சென்ற பின்னரும் அந்தக் கனவின் ஆதிக்கத்திலிருந்து மீள முடியாமல் அரை நாள் விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டு, வீட்டுக்கு வந்து என்ன ஏன் இப்பவே வந்துட்டீங்க என்ற சகதர்மிணியின் குரலால் விடுபட்டு, ஒன்றுமில்லை கொஞ்சம் தலைவலி என்றவன் உடுப்புகளைக் கூட களையாமல் அதே படுக்கையில் படுக்கப் போனவன்
அந்தப் படுக்கையில் படுக்கவே பயந்து, நாற்காலியில் உட்கார்ந்தான்.

எப்போதுமே எல்லா விஷயங்களையும் சக தர்மிணியிடம் பகிர்ந்து கொள்ளும் ராகவன், இதைப் பற்றிப் பேசி அவளையும் குழப்புவானேன் என்று எண்ணமிட்டபடி தான் மட்டும் குழம்பிக்கொண்டிருந்தான். இது என்ன மன விசித்திரம், எண்ணங்களே கனவுகளாய் வருமென்று விக்ஞானம் சொல்லுகிறதே,ஆனால் எனக்குள் அந்த எண்ணமே இல்லையே,பின் எப்படி வந்தது அந்தக் கனவு, யோசித்து யோசித்து மூளை சூடானது சகதர்மிணி கொடுத்த காப்பியைப் பருகியபடியே அவளையே பார்த்துக் கொண்டிருந்த ராகவனிடம் வந்து உட்கார்ந்தாள் அவன் மனைவி சுஜாதா.

என்னங்க ஏன் என்னவோ போல இருக்கீங்க, நான் கொஞ்சம் அமிர்தாஞ்சனம் தேய்த்து விடட்டுமாஎன்ற சுஜாதாவை நிமிர்ந்து பார்த்தான் சுஜாதா அவன் நெற்றியில் கொஞ்ஜம் அமிர்தாஞ்சனத்தை தடவி தேய்த்துவிட அதன் சுகத்தில் கொஞ்ஜம் லயித்துப் போன ராகவன் திடுக்கிட்டு தள்ளி உட்கார்ந்தான்.

பதறிப் போன சுஜாதா வாங்க நாம டாக்டர்கிட்ட போய் காமிச்சுட்டு வந்துடலாம் என்றாள் கவலையுடன், அவளையே வெறித்தபடி இருந்த ராகவன் என்னைத் தனியா கொஞ்ச நேரம் இருக்கவிடேன் என்று எறிந்து விழுந்தான். திருமணம் ஆகி இத்தனை வருடங்களில் அதிர்ந்து கூட பேசாத ராகவனின் ஆத்திரம் கலந்த குரல் சுஜாதாவை திடுக்கிட வைத்தது. அவள் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

இதோ பாரு எப்பவுமே எனக்கு பெண்கள் அழுதாப் பிடிக்காது இப்போ என்ன ஆயிடித்தூன்னு நீ அழற முதல்ல கண்ணைத் துடைச்சுக்கோ என்னைத் தனியா கொஞ்ச நேரம் விடு என்ற கணவனை ஆச்சரியமாக பார்த்த சுஜாதாஅவனை விட்டு விலகி வெளியே சென்றாள்.
ஏதாவது வேனும்னா என்னைக் கூப்புடுங்கோ, என்ற அவள் குரல் அவனை ஏதோ செய்தது சரி இந்த நிலைமை சரியில்லை, இது வரைக்கும் எதுக்குமே மனைவியை குரல் உயர்த்தி பேசாதவன் இன்று நடந்து கொண்டவிதம் அவனுக்கே ஒரு குற்ற உணர்ச்சியைக் கொடுத்தது.

ஒரு கனவு நம்மை இவ்வளவு தூரம் ஆட்டி வைக்க நாம் இடம் கொடுக்கக் கூடாது என்று நினைத்த ராகவன் ,சுஜாதா இங்க வா என்றான் சுஜாதாவும் அவன் குரலுக்கு உடனே ஓடி வந்து என்னங்க கூட்டீங்களா என்று அவலுடன் அவனருகில் உட்கார்ந்தாள்.
சுஜாதா என்னை மன்னித்துவிடும்மா ஏதோ குழப்பத்துலெ உன் கிட்ட எறிஞ்சு விழுந்துட்டேன் அப்பிடீன்னு சொல்லிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்த ராகவன் மனதில் அப்படிக் கூட நடக்குமா நம் மானம் மரியாதை எல்லாம் காற்றில் பறந்து விடுமா தானாய்ச் சிலிர்த்த உடலைக் குறுகிக் கொண்டான் ராகவன்.

பதறிப் போன சுஜாதா அவனுக்குப் போர்வையை எடுத்து போர்த்திவிட்டு நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க! என்றபடி விலகிப் போய் ,குடும்ப டாக்டரை தொடர்பு
கொண்டு அவரை வரவழைத்தாள்.

டாக்டர் வந்து என்ன ராகவன் உடம்புக்கு என்ன என்றார் . திடுக்கிட்டான் ராகவன் இப்போ எதுக்கு இப்பிடி ஆர்ப்பாட்டம் செய்யறே எனக்கு என்ன ஆச்சு, எதுக்கு டாக்டரையெல்லாம், வரவழைச்சே என்றான் சுஜாதாவிடம்.

டாக்டர் அவனை சோதித்துவிட்டு பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை ஜுரம்கூட இல்லை இவருக்கு ஏதோ மன அதிர்ச்சிதான்னு நெனைக்கறேன் கொஞ்ச நேரம் தூங்கட்டும் சரியாயிடும்,என்றபடி நான் வரேன் ராகவன் கொஞ்சம் தூங்குங்க
என்றபடி வெளியே போனார் .

ஆமாம் இப்போஎனக்கென்ன ஆச்சு எதுக்கு சுஜாதாகிட்ட எறிஞ்சு விழறேன் என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்ட ராகவன்,சுஜாதாவை மன்னிப்பு கோறும் பாவனையாக திரும்பிப் பார்த்தான். சரி நீங்க தூங்குங்க என்றபடி வெளியே போனாள் சுஜாதா.

மீண்டும் தூங்கத் துவங்கினான் ராகவன் “ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவனை யாரோ மலை உச்சியில் இருந்து உருட்டிவிட்டாற் போல திடுக்கிட்டு எழுந்த ராகவன் கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு சுதாரித்துக் கொண்டு மணியைப் பார்த்த போது ,விடியற்காலை மணி 4.30.

இது போன்ற கனவு நமக்கு வரக் கூடாதே விடியற்காலையில் கண்ட கனவு அப்படியே பலிக்கும் என்று யாரோ சொன்னது ஞாபகம் வந்தது பதறிப் போய் எழுந்தான் .
இல்லை எழுந்தார் கட்டை ப்ரும்மச்சாரியான ராகவானந்த பால சன்யாசி
— சுபம் —-

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book