15 கர்ப்ப வாசம்

 

 

செல்போன் சிணுங்கியது. ஹலோ என்றார் ராமநாதன். எதிர்முனையில் வழக்கத்துக்கு மாறான இளமையான உற்சாகக் குரல்.

ஏங்க நான் என்னோட தோழி கமலா வீட்டிலேருந்து பேசறேன். நேத்து எங்க மாமா பொண்ணோட கல்யாணம் நல்லா நடந்துது. நீங்க ஏன் வரலேன்னு எல்லாரும் கேட்டாங்க. நான் அவருக்கு முக்கியமான மீட்டிங், அதுனாலே அவராலே வர முடியலைன்னு  சொன்னேன். எல்லாரும் உங்களை விசாரிச்சேன்னு சொல்லச் சொன்னாங்க. நீங்க வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுங்க. அப்புறம் ராத்திரி  ஞாபகமா கொலஸ்ட்ராலுக்கு மாத்திரை சாப்புடுங்க. நான் நாளைக்கு ராத்திரி கிளம்பி நாளை மறுநாள் காலை 8 மணிக்கு செண்ட்ரலுக்கு வந்துருவேன். என்னோட என் தோழி  கமலாவும் அவ புருஷன் ஜெயராமனும் வராங்க. அதுனாலே  நாங்களே ஒரு டாக்ஸி புடிச்சு வந்துடறோம் நீங்க அலையவேணாம் என்றாள், அவரின் தர்ம பத்தினி பாக்கியம்.

ஹூம் சரி  ஜாக்கிரதையா வா என்றார் ராமநாதன். சரிங்க நான் ஜாக்கிறதையா வரேன். கூடவே கமலா இருக்கா. பயப்பட ஒண்ணும் இல்லே. நீங்க கவலைப்படாமே தூங்குங்க.   சரி குட் நைட் என்றாள் பாக்கியம். பாக்கியத்தின் குரலில் இருந்த உற்சாகம் அவரையும் தொத்திக்கொண்டது போல் ஒரு உணர்வு. அப்பிடி என்ன இவள் உற்சாகத்துக்கு காரணம் என்று யோசித்தார் ராமநாதன்!

இவளைப் பெண் பார்க்க அந்தக் கிராமத்துக்கு சென்றது அவர் மனத்தில் பசுமையாய் உலா வந்தது.

பெண் பார்த்து வழக்கம்போல அவர்கள் மரியாதையாக அளித்த  பஜ்ஜி, கேசரி  எல்லாம் உண்ட பிறகு, ஆவலுடன்  இவர் முகத்தையே அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ராமநாதனுக்கு அப்போது வயது 27. ஆனாலும் மிகவும் தெளிந்த மனத்துடன் வாழ்க்கையைத் திட்டமிட்டிருந்தார். அதனால் பெண்ணின் தந்தை சுந்தர்ராஜனைப் பார்த்து, சார் எனக்குப் பெண் பிடித்திருக்கு. அவங்களையும் ஒரு வார்த்தை கேளுங்கொ என்னை பிடிச்சிருக்கான்னு. அப்பிடிப் பிடிச்சிருந்தா எனக்குச் சம்மதம்  என்றார்.

அந்த வீட்டில் இருந்த ஒரு பெரியவர் அதெல்லாம் பிடிக்கும். உங்களைப் போயி யாராவது பிடிக்கலைன்னு சொல்லுவாங்களா  என்றார்.
அப்பிடி இல்லை நீங்க அவங்களைக் கேளுங்கோ என்னைப் பிடிச்சிருக்கான்னு. அவங்களுக்குப் பிடிச்சிருந்தா மேலே பேசலாம்’ என்றார் தீர்மானமாக.
சரி கொஞ்சம் இருங்க என்றபடி பெண்மணி ஒருவர் எழுந்து உள்ளே போனார். சற்று நேரம் கழித்து அந்தப் பெண்மணி   கூடத்துக்கு வந்து தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொண்டு வெட்கப்பட்டபடியே மாப்பிள்ளை அவளுக்கும் உங்களைப் பிடிச்சிருக்காம் என்று சொன்னார்.

ஒரு மகிழ்ச்சி நிறைந்தது கூடத்தில். சரி மேலே பேசலாம் என்று மகிழ்வாக குரல் கொடுத்தார் பெரியவர் ஒருவர்.
ராமநாதனின் அப்பா – அம்மாவிடம் பெண்ணின் தந்தை சுந்தர்ராஜன் ‘என்ன செய்யணும்னு சொல்லுங்கோ செய்யலாம். எனக்கு மூணு பொண்ணு, ஒரு பையன். இவதான் மூத்தவ என்றார். அவர் மகளுக்கு என்னையும், எனக்கு அவர்  மகளையும் பிடித்திருக்கே என்கிற மகிழ்ச்சியும், என்ன கேட்பார்களோ நம்மால் செய்ய முடியுமோ நல்ல மாப்பிள்ளையாக நல்ல குடும்பமாக இருக்கிறதே தவறவிடக் கூடாதே என்கிற கவலையும் அவர் குரலில் கலந்திருந்தது.

சார் எங்க அப்பா – அம்மா என்னோட மகிழ்ச்சிக்காகவே வாழறவங்க. நான் எது சொன்னாலும் அப்பிடியே ஏத்துக்குவாங்க. அதுனாலே அவங்ககிட்ட நான் ஏற்கெனவே பேசி இருக்கேன். என் மனசு என்னான்னு அவங்களுக்கு  தெரியும் எனச் சொல்லிவிட்டு, என்ன அப்பா அம்மா நான் மேற்கொண்டு சொல்லவா என்பதைப் போல் பார்த்தார்  ராமநாதன். அவருடைய  பெற்றோர் இருவரும் மனம் நிறைய மகிழ்ச்சியுடன் ‘எங்களுக்கும் பொண்ணு பிடிச்சிருக்கு. எங்க வீட்டுக்கு இவதான் மருமகள். அதுனாலே என் பையன் என்ன சொல்றானோ அதையே செய்யுங்க என்றார்கள் ஏகோபித்த குரலில்.

இப்போது சுந்தர்ராஜன் முகத்தில் இன்னும் கூடுதலான பொறுப்பும் கவலையும் சேர்ந்தது. சொல்லுங்கோ நீங்க என்ன செய்யணும்னு சொன்னா நான் அதையெல்லாம் செய்யத் தயாரா இருக்கேன் என்றார். அங்கிருந்த பெரியவர் ஒருவர்  மாப்பிள்ளை இந்த ஊரிலே இது வரைக்கும் பொண்ணை வெளியே குடுத்து சம்பந்தம் செய்யிற வழக்கமில்லே. இதுதான் முதல் தடவை. அதுனாலே நீங்க எங்க பொண்ணைக் கல்யாணம் செஞ்சிண்டா இந்த ஊருக்கே  நீங்கதான் ஸ்பெஷல்’ என்றார்.

ராமநாதன் அவரைப் பார்த்து முறுவலித்துவிட்டு நான் நல்லா சம்பாதிக்கறேன். என்னோட அக்காவுக்கு கல்யாணம் முடிச்சாச்சு. எனக்கு இனிமே எங்க அப்பா அம்மாவைக் கப்பாத்தற பொறுப்பு மட்டும்தான் இருக்கு. இப்போ உங்க பொண்ணு, அதான் என்னோட வருங்கால மனைவியையும் காப்பாத்தற பொறுப்பும் சேருது. அதுனாலே என்று நிறுத்தினார். எல்லோரும் அவர் வாயையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

என்னோட மனைவி நான் சம்பாதிக்கிற பணத்தை வெச்சிண்டு சிக்கனமா என்னோட வாழ்ந்தா எனக்கு சந்தோஷம். இந்தக் கல்யாணத்துக்கு உங்களாலே கடன் வாங்காமே எவ்வளவு செலவு செய்ய முடியும்னு ஒரு பட்ஜெட் போடுங்க. அதுக்குள்ள கல்யாணத்தை முடிங்க. எனக்கு வேண்டியது ஒரு நல்ல மனைவி. அவ்ளோதான். வேற எதுவானாலும் என்னோட உழைப்பாலேயே சம்பாதிக்க முடியும்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு என்றான். பெண்ணின் தந்தை சுந்தர்ராஜன் எழுந்து வந்து, ராமநாதனின் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘மாப்பிள்ளை நான் போன ஜென்மத்திலே செஞ்ச புண்ணியம் நீங்க’ என்றார். அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

அடடா, கொஞ்சம் விட்டா முப்பது வருஷ வாழ்க்கையையும் நெனைச்சுப் பாக்க ஆரம்பிச்சிருவேன் போல இருக்கே என்று யோசித்தார் ராமநாதன்.
அது சரி அது எப்பிடி இவ்வளவு உற்சாகம் பாக்கியத்துக்கு. எனக்கும் அந்த உற்சாகம் தொத்திக்கிற அளவுக்கு… அப்போதுதான் அவருக்கு  ஞாபகம் வந்தது கல்யாணம் ஆன அடுத்த வாரமே அவர்கள் குடும்பமும் அந்த ஊரை விட்டு டெல்லிக்குப் போய்விட்டதும், அவரும் அந்த ஊரை மறந்தே போனார். அதன் பிறகு அடிக்கடி டெல்லி போவதும் வருவதுமாக வாழ்க்கை  நல்ல நிலைக்கு வந்தாயிற்று. முப்பது வருடம் சந்தோஷமா வாழ்ந்திண்டு இருக்கோம்.

ஏதோ ஓரளவு புரிந்தாற்போல் ஒரு உணர்வு. செல் போனை எடுத்து பாக்கியத்தைத் தொடர்பு கொண்டார் ராமநாதன். எதிர்முனையில் பாக்கியம் என்னங்க என்றாள். அப்போதும் அதே உற்சாகமான குரல். ஆமா ரெண்டு நாளா அந்தக் கிராமத்திலே எப்பிடி பொழுது போச்சு உனக்கு என்றார் ராமநாதன். பாக்கியம் பொழுது போறலைங்க. நாங்க எல்லாம் நேத்திக்கு ஆத்துலே போயி குளிச்சோமே. அப்புறம் கோயிலுக்கு போனோம். கோயில்லே அந்த மண்டபத்தைப் பார்த்ததும் முன்னாலே நாங்க விளையாடினதெல்லாம் ஞாபகம் வந்துது. என்ன இருந்தாலும்  பொறந்து வளந்த இடம் சொர்க்கம்தாங்க என்றாள் உற்சாகமாக.

ராமநாதன் சரி பத்திரமா வா. நாளைக்கு நானே கார் எடுத்துண்டு வந்து, உங்களைக் கூட்டிண்டு வரேன் வீட்டுக்கு என்றார் உற்சாகமாக.

அவருக்கும் தன் சொந்த ஊருக்குப் போகவேண்டும் என்கிற ஆசை தோன்றியது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *