45 காதலர்கள் தப்பி ஓட்டம்

 

அந்தக் காவல் நிலையத்தின் உயர் அதிகாரி தலையைப் பிய்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். எதிரே இருந்த அனைவரும் ஒரே குரலில் கத்திக் கொண்டிருந்தனர்.

சத்தம் தாங்க முடியவில்லை ஆனால் யாரையும் கட்டுப் படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தார் பெரிய இடத்திலிருந்து வந்த சிபாரிசு யாரையும் அதட்டிக் கூட பேச முடியவில்லை
இதோ பாருங்க தயவு செய்து ஒவ்வொருத்தரா பேசுங்க
எனக்கு ஒண்ணுமே காதிலெ விழமாட்டேங்குது.

ஏதோ பெரிய மனசு பண்ணி ஒருத்தர் எல்லாரும் சும்மா இருங்கப்பா நான் சொல்றேன் என்றார் சத்தம் கொஞ்சம் மட்டுப்பட்டது. சார் இப்போ நெலமை ரொம்ப மோசம். எங்களுக்கெல்லாம் என்ன செய்யிறதுன்னே தெரியலை. ஒரு வாரத்துலெ கல்யாணம் இந்த நேரத்திலெ மாப்பிள்ளையையும் பொண்ணையும் காணோம்னா ஊர்லெ என்ன பேசுவாங்க.

உங்களுக்கு தெரியும் இல்லே இந்த நாட்டிலேயே எங்க குடும்பத்தைப் பற்றி தெரியாதவங்களே கிடையாது அது மட்டுமில்லை மாப்பிள்ளையை தெரியாதவங்க தமிழ் நாட்டிலேயே யாரும் கிடையாது. அப்பிடி இருக்கும் போது இந்த விஷயம் வெளியிலெ கொஞ்சம் தெரிஞ்சாக்கூட அசிங்கமாயிடும். பத்திரிகைக் காரங்களுக்கு தெரிஞ்சாப் போதும் பத்தி பத்தியா எழுதிக் கிழிச்சுடுவாங்க.

அதுனாலெதான் சொல்றேன் இவங்களுக்கு கொஞ்சமும் தெரியலை. கத்தாதீங்கைய்யா தயவு செய்து சொல்றேன் கத்தாதீங்க..நான் பாத்துக்கறேன் இந்த இன்ஸ்பெக்டர் எப்பிடியும் கண்டு பிடிச்சு குடுத்துருவாரு.

இதோ பாருங்க இன்ஸ்பெக்டர் எனக்குத் தெரிஞ்சு மாப்பிள்ளையும் பொண்ணும்,அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புறிஞ்சவங்க என்றார் அந்தப் பெரியவர்.

இன்ஸ்பெக்டர் உடனே சார் நீங்க சொல்லுங்க அவங்களை யாராவது கடத்திகிட்டு போயிருக்கலாமோ அவங்களுக்கு யாராவது விரோதி இருந்தா சொல்லுங்க எங்களுக்கும் தேடறதுக்கு வசதியா இருக்கும்.

நாங்க எந்த கேசுக்கும் இவ்வளவு கஷ்டப்பட்டதில்லே
நாங்க ரொம்ப கவனமா இருந்தாகணும் விஷயம் கொஞ்சம் வெளிலே தெரிஞ்சாலும் ஹோம் மினிஸ்டர் எங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாரு யார் கிட்டயும் சொல்லவும் முடியாது ரகசியமா தேடணும்.

தயவு செய்து நீங்க எல்லாரையும் உங்க வீட்டுக்கு போகச் சொல்லிடுங்க , நீங்க மட்டும் இருந்தா போதும் என்றார்.
அவர் போய் என்ன சொன்னாரோ தெரியலை எல்லாரும் ஏதோ பேசிக் கொண்டே கிளம்பிச் சென்றனர்.

சார் இப்போ சொல்லுங்க என்ன செய்யப் போறிங்க என்ற அந்தப் பெரியவரைப் பார்த்து என்ன சொல்வதென்றே தெரியாமல்
தலையில் கை வைத்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.
ஒரு போலீஸ்காரர் சாதாரண உடையில் வந்து இன்ஸ்பெக்டரிடம் ஏதோ சொன்னார் , இன்ஸ்பெக்டரின் முகம் மாறியது ,சரி நீங்க அங்கேயே இருங்க , கண் காணிச்சிகிட்டே இருங்க நான் சொல்ற வரைக்கும் அவங்களை எங்கேயும் தப்பி போக விடாதீங்க என்றார், விரைப்பாக ஒரு சல்யூட் அடித்து விட்டு அகன்றார் போலீஸ்காரர்.

இப்போது இன்ஸ்பெக்டரின் முகத்தில் ஒரு சந்தோஷம்
கவலைப்படாதீங்க கண்டு பிடிச்சுட்டாங்க, வாங்க போகலாம் என்ற படி தொப்பியை மாட்டிக் கொண்டு 302 வண்டியை எடுங்க என்றார் கம்பீரமான குரலில் காவல்துறை வாகனம் கோயில் வாயிலில் போய் நின்றது . அந்தக் கோயில் கருவறையிலிருந்து குருக்கள் சகிதமாக கழுத்தில் திருமாங்கல்யத்துடன் வெளிவந்த கல்யாணப் பெண்ணையும், மாப்பிள்ளையையும் ஆச்சரியத்துடன் பார்த்தனர் அத்தனை உறவுக் காரர்களும் அதிர்ச்சி கொஞ்சம் தெளிந்து அந்தப் பெரியவர்

என்ன மாப்பிள்ளை இது எதுக்கு இப்படி திருட்டுத் தாலி கட்டணும் நாங்கதான் எல்லாரும் உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கத்தானே ஏற்பாடெல்லாம் செய்யிறோம் என்றார்

மாப்பிள்ளை பேச ஆரம்பித்தார் இதோ பாருங்க உங்க எல்லார்கிட்டையும் சொன்னோம். அனாவசியமான செலவே யாரும் செய்ய வேண்டாம் அப்பிடீன்னு அப்பிடி இருக்கும் போது நீங்க எல்லாரும் சேந்து ஏற்பாடெல்லாம் செஞ்சீங்க, அப்புறம் எதுக்கு எங்களை குறை சொல்லணும்.

என்ன மாப்பிள்ளை சொல்றீங்க என்றார் புரியாத குரலில் பெரியவர். நாங்க எவ்வளவோ சொன்னோம் யாரும் கேக்கலை
அதுனாலே தான் இப்பிடி ஒரு முடிவெடுத்தோம். எவ்வளவோ சின்னஞ் சிறுசுகள் கல்யாணம் செஞ்சுக்க பணம் இல்லாம திண்டாடும்போது, எதுக்கு எங்களோட அறுபதாம் கல்யாணத்துக்கு அனாவசியமா செலவு செய்யணும்?

அதுனாலேதான் இப்பிடி ஒரு முடிவெடுத்தோம் என்றார்கள் ஒரே குரலில் அந்த முதிய தம்பதிகள்.

சுபம்
 

 

License

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *