32 சக்கரம்

 

ராமசீதா இட்டிலிக் கடை வாசனையாக அமர்க்களமாக மணந்துகொண்டிருந்தது. இடைவிடாது வந்துகொண்டிருக்கும் வாடிக்கையாளர்களைக் கவனித்து உணவுப் பொருட்களோடு தங்களின் உபசரிப்பையும் ராமசேஷனும் அவர் மனைவி சீதாவும் வழங்கிக்கொண்டிருந்தனர்.

ஆய்ந்து ஓய்ந்து கடையை மூடியபோது இரவு 10 மணி. நெற்றி வியர்வையை தன்னுடைய தலைப்பால் துடைத்துவிட்டு தானும் துடைத்துக்கொண்டு, கல்லாவில் இருந்த பணத்தை ஒரு ரூபாய் மட்டும் விட்டு விட்டு மற்றவற்றை எடுத்துக்கொண்டு வந்து மொத்தமாக வைத்தார் ராமசேஷன்.

கதவைச் சாத்தித் தாழிட்டுவிட்டு எண்ணத் தொடங்கினர் இருவரும். கணிசமாகச் சேர்ந்திருந்தது அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, இதை நாளைக்குக் கிருஷ்ணனின் பள்ளிக் கூடத்தில் கொண்டு போய்க் கட்டிவிட்டு வந்துடு. நீ வர வரைக்கும் கடைய நான் பாத்துக்கறேன் என்று சொல்லியபடியே, தள்ளிப் போனார் ராமசேஷன்.

சீதா சரி என்று தலையை ஆட்டிவிட்டு அந்தப் பணத்தைக் கொண்டு போய், சுவாமி படத்தின் பின்னால் வைத்துவிட்டு மறுநாள் சிற்றுண்டி விடுதிக்குத் தேவையான ஏற்பாடுகளைக் கவனித்து விட்டுப் படுத்தாள். ராமசேஷனும் சீதாவும் வழக்கம் போல் சுவாமிக்கு நன்றி சொல்லிவிட்டு தூங்க ஆரம்பித்தனர்.

அவர்கள் மகன் கிருஷ்ணன் அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றான். எப்பிடி இருந்த குடும்பம், எங்கிருந்தோ ஒரு பொண்ணு இந்தக் குடும்பத்துக்கு வந்து எல்லாரையும் ஆட்டிவெச்சு, குடும்பத்தைப் பிரிச்சு இதுமாதிரி நடுத்தெருவிலே கொண்டு வந்து அனாதையா நிக்க வெச்சிட்டாளே. அவங்க கண்ணு முன்னாடி நாம நல்லா படிச்சு முன்னுக்கு வந்து இவா ரெண்டு பேரையும் நல்லா வெச்சிக்கணும் என்னும் உறுதியோடு மீண்டும் தீவிரமாகப் படிக்கத் தொடங்கினான்.

ஆனாலும் படிக்கவிடாமல் அவனை அந்த நினைவுகள் ஆக்ரமித்துக்கொண்டே இருந்தன. ஒண்ணு நான் இந்த வீட்டிலே இருக்கணும்னா இவாளை இங்கே இனிமே வெச்சிக்க முடியாது. நானா இல்லே இவங்களா? நீங்களே யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்து சொல்லுங்க. நான் அது வரைக்கும் எங்க அப்பா அம்மாவோட இருக்கேன்’ என்ற படி தீர்மானமாய் பெட்டியைத் தூக்கிகொண்டு படி இறங்கிப் போனாள் மூத்த மருமகள்.

திகைத்து நின்ற அண்ணனிடம் உன்னோட வாழ்க்கைதான் எங்களுக்கு முக்கியம், அதுனாலே நாங்க வெளிலே போறோம், இனிமே எங்களோட பாட்டை நாங்க பாத்துக்கறோம். எப்பிடி இருந்தாலும் உறவு விட்டுப் போகாது. அதுனாலே அவளைச் சமாதானப்படுத்தி அழைச்சிண்டு வந்து அவளோட சந்தோஷமா வாழறதுதான் உன்னோட கடமை. நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணைக் கண் கலங்காமெ வெச்சிக்கணும். அதுதான் சரி. என்று தீர்மானமாகக் கூறிவிட்டு மூவரும் படியிறங்கினர்.

அண்ணன் விதியின் கைப்பாவையாய் வாயடைத்து கண்களில் கண்ணீருடன் நின்றார். ஆனால் அதன் பிறகு அண்ணன் உண்மையிலேயே அண்ணியின் கைப்பாவையாகவே மாறிப் போனார். அவனுக்கு நடுத் தெருவில் ஒரு பக்கம் அம்மா ஒரு பக்கம் அப்பா. மூவருமே அனாதையாக நின்ற கோலம் மனக் கண்ணில் தோன்றியது. அடடா அப்பாதான் எவ்வளவு தீர்க்கதரிசி நீ ஒண்ணும் கவலைப்படாதே உன் படிப்பு எந்தக் காரணம் கொண்டும் நிற்காது. வா போலாம் என்றபடி நடுத் தெருவிலிருந்து ஓரமாகப் போய் உட்கார்ந்துகொண்டு யோசிக்கலானார்.

நாம நடுத்தெருவிலே இல்லேடா ஓரமா வந்துட்டோம் தைரியம் எப்பவும் நம்மைக் கைவிடாது. தெய்வம் நம்மைப் பாத்துக்கும் என்று கூறிவிட்டு யோசித்துக் கொண்டிருந்தார் ராமசேஷன். சிறிது நேரத்தில் அவர் முகத்தில் ஒரு வெளிச்சம்.
ஏன் சீதா நீ இட்லியும் மொளகாப் பொடியும் போட்டு அதுக்கு மேலே கொஞ்சம் நல்ல எண்ணையை விட்டு குடுப்பியே அந்த மாதிரி ருசியை நான் எங்கேயுமே சாப்டதில்லே. எவ்வளவு நன்னா இருக்கும் தெரியுமா’ என்றார்.

சீதா நிமிர்ந்து பார்த்தாள். மறுநாள் அந்தத் தெருவின் கடைசியில் ஒரு குடிசை இரவோடு இரவாக முளைத்தது. வாசலில் ராமசீதாஇட்டிலிக்கடை என்று வெறும் வெள்ளைக் கட்டியால் எழுதப்பட்ட பலகை இருந்தது. உள்ளிருந்து சுவையான இட்லியின் மணமும் சேர்ந்து போவோர் வருவோரை இழுத்தது…. இழுத்தது…. இழுத்துக்கொண்டே இருந்தது.

(சில வருடங்களுக்குப் பிறகு.)

அப்பா அம்மா ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க என்றபடி காலில் விழுந்தான் கிருஷ்ணன். தலைக்கு உசந்த பிள்ளை நமஸ்காரம் பண்ணவுடனே தூக்கி தன் அருகே நிக்க வெச்சுண்டு ராமசேஷன் என்னப்பா பாஸ் பண்ணிட்டியா நீதானே முதல் மார்க் வாங்கி இருக்கே என்றார். உச்சி மோந்து ஆசீவாதம் செய்தார்.
சீதா நிமிர்ந்து பார்த்தாள். இரு வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ணன் அப்பா அம்மா நீங்க ரெண்டுபேரும் உழைச்சது போதும். கடையை மூடிடுங்கோ. இனிமே உங்களை பாத்துக்கறது என் பொறுப்பு என்றான்.

ராமசேஷன் சீதாவைப் பார்த்தார். சீதா நிமிர்ந்து அவரைப் பார்த்தாள் அந்தப் பார்வை கொஞ்சம் குழம்பி, பின் தெளிவடைந்தது. என்னம்மா என்ன யோசனை என்றார் ராமசேஷன். ஒண்ணும் கவலைப்படாதே நம்ம புள்ள நல்ல புள்ள என்றார்.

சீதா சரி என்று ஒரு ஒற்றைச் சொல் சொல்லிவிட்டு மீண்டும் அவரை நிமிர்ந்து பார்த்தாள். அதில் சீரான தெளிவான பல செய்திகளின் நீரோட்டம் இருந்தது. இன்னும் இரண்டு வருடங்கள் கழிந்தது. கிருஷ்ணன் ஒரு நாள் அப்பா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்று தயங்கினான்.

சொல்லுப்பா. என்ன விஷயம் என்றார் ராமசேஷன். ஒண்ணுமில்லைப்பா எனக்கு ஒரு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. அவளை எனக்குக் கல்யாணம் செஞ்சுவைக்கறீங்களா என்றான். உடனே ராமசேஷன் ரொம்ப சந்தோஷம். பொண்ணு யாருன்னு சொல்லு. நானே போய்ப் பேசிட்டு வந்துடறேன்’ என்றார்.

பெண்ணின் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது இதோ பாருங்க. நாங்க உழைப்பையும் தெய்வத்தையும் நம்பறோம். அதுனாலே வரதட்சிணை அப்பிடி இப்பிடியெல்லாம் பேசாதீங்க. எங்க வீட்டிலே ரொம்ப நாளா ஒரு பொண்ணு குழந்தை இல்லை. உங்க பொண்ணை எங்க வீட்டுக்கு அனுப்புங்க. நாங்க எங்க பொண்ணு மாதிரி பாத்துக்கறோம்’ என்றார் ராமசேஷன்

சீதா சிரித்த முகத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்து விட்டு இயல்பானாள் ராமேஷம் புரிந்துகொண்டார். இதோ பாருங்க சீதாக்கு கூட உங்க பொண்ணைப் பிடிச்சிருக்கு என்றார் ராமசேஷன் அந்தப் பெண் லக்ஷ்மி வந்து அனைவருக்கும் நமஸ்காரம் செய்தாள். ராமசேஷனிடம் வந்து மாமா என்றாள். மாமான்னு சொல்லாதேம்மா. அப்பான்னே கூப்புடு என்றார் ராமசேஷன். நாதஸ்வர சத்தம் கேட்க ஆரம்பித்தது.

எல்லாம் மங்களமா முடிஞ்சுடுத்து. இனிமே இவ உங்க வீட்டுப் பொண்ணு என்றார்கள். ஒரு மாதம் கழித்து ஏர்போர்ட்டில் மருமகளையும் மகனையும் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்துவிட்டு அக்கடா என்று உட்கார்ந்தார்கள் ராமசேஷனும் சீதாவும். ஒரு வருடம் கழிந்தது. தொலைபேசியில் கிருஷ்ணன் அப்பா எங்களுக்கு ஆண் குழந்தை பொறந்திருக்குப்பா என்றான். சீதா நமக்கு பேரன் பிறந்திருக்கானாம். இன்னும் மூணு மாசத்துலெ குழந்தையைக் கூட்டிண்டு இங்கே வராங்களாம் என்றார் ராமசேஷன். இருவரும் ஆசையோடு காத்திருந்தனர்.

பேரனை எடுத்துக்கொண்டு கிருஷ்ணனும் அவன் மனைவி லக்ஷ்மியும் ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தனர். ராமசேஷன் பேரனைப் தோளிலே தூக்கியபடி கொஞ்சிவிட்டு சீதாவிடம் கொடுத்தார் . பேரன் தாத்தா பாட்டி என்றான் மழலையில்.அவர் கூடவே வெளியே வந்த கிருஷ்ணன்,அப்பா உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் என்றான், சொல்லுப்பா என்றார் ராமசேஷன் .

அப்பா அம்மா பாவம்பா நாமெல்லாரும் இருந்தோமே அந்த தெரு அந்த வீடு பக்கத்திலேயே கோயில் அதெல்லாம் அம்மாக்கு ரொம்பப் பிடிக்கும்பா. அதுனாலே அந்த வீட்டை நான் உங்க பேர்லே வாங்கிட்டேன் நீங்க ரெண்டு பேரும் அங்கேயே போய் இருந்தா அம்மாக்கும் சந்தோஷமா இருக்கும் அம்மாக்கும் தோட்டம் போடறது, செடி நடறது இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும் என்றான்.

சீதா நம்ம சந்தோஷத்துக்காக கிருஷ்ணன் யோசிச்சு ஒரு முடிவு எடுத்திருக்கான் காதிலே விழுந்துதா . சரிப்பா ஆனா ஒரு கண்டிஷன் . எதுக்கு தெரியுமா உன்னை மாதிரி நல்ல பிள்ளைகள் குறைவு . எத்தனையோ பிள்ளைகள் பெத்தவங்களை வெச்சுக்கறதில்லே அதுனாலே நானும் அம்மாவும் மறுபடியும் அந்த இட்லிக் கடையை ஆரம்பிக்கப் போறோம் . நடுத்தெருவும் தெரு ஓரமும் உலகத்துலெ எல்லா இடத்திலேயும் இருக்கும் இல்லே.

ஏன் சீதா நீ இட்லியும் மொளகாப் பொடியும் போட்டு அதுக்கு மேலே கொஞ்சம் நல்ல எண்ணையை விட்டுக் குடுப்பியே எவ்வளவு நன்னா இருக்கும் தெரியுமா என்றார் ராமசேஷன். எட்டு ஊருக்கு வாசனை மணக்கும் என்றாள் சீதா . நிமிர்ந்து பார்த்தார் ராமசேஷன் . மீண்டும் ராமசீதா இட்டிலிக்கடை தொடங்கியது, பலமுதியவர்களுக்கு அடைக்கலம் அளிக்க ராமசீதா இட்டிலியும் மிளகாய்ப் பொடியும் நல்லெண்ணெயும் மணக்க ஆரம்பித்தது.

சுபம்

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *