7

 

என்னவோ ஒரு மாற்றம் தெரிகிறது இவன்கிட்ட… என்னான்னு புரியலை. எப்போதும் போலவே இரவு வருவதும் வரும்போதே குடித்துவிட்டு வருவதும் வழக்கம்போல தொடர்கிறது. ஆனால் ஒரு நிம்மதி. இவன் எப்போதுமே அதிகமாகக் குடிப்பதில்லை. குடித்திருந்தாலும் நிதானம் தவறாமல்தான் இருப்பான். இப்போதும் அப்படியேதான் இருக்கிறான். ஆனாலும் ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது. அஞ்சலைக்குக் குழப்பம் தலையைத் தின்றாலும் சரி அதுவாக ஒருநாள் வெளியே வரும் என்று அவளும் கூடிய வரையில் இயல்பாகவே இருந்தாள்.

இன்னும் அவன் வரவில்லை. பிள்ளைக்குப் பால் கொடுத்துவிட்டு தூளியில் போட்டு ஆட்டிக்கொண்டிருந்தாள். தூளிக் கயிற்றின் அல்லாட்டம் போல, அஞ்சலைக்கு இவனைக் காதலித்ததும் அதனால் வந்த எதிர்ப்புகளும் அத்தனையையும் பொருட்படுத்தாமல் திடமாக நின்று இவனையே கல்யாணம் செய்துகொண்ட அந்த அத்தனை ரத்தக் களறிகளும் நினைவுக்கு வந்தன.

திடீரென்று ஏதோ இனம் புரியாத சத்தம், எலி வளை தோண்டுவது போல. உற்றுக் கவனித்தவள், அந்த சத்தம், தூளியிலிருந்துதான் வருகிறது என்பதை உணர்ந்து எட்டிப் பார்த்தாள். இவள் கொடுத்த பால் தொண்டையில் மாட்டிக்கொண்டது போலும். குழந்தை மூச்சு விட முடியாமல்  திணறிக்கொண்டிருந்தது. பதறிப் போய்க் குழந்தையை எடுத்து, முதுகில் தட்டினாள்.

இன்னும் குழந்தை தவித்துக்கொண்டிருந்தது. அவளுக்கு  திடீரென்று ஒரு நிகழ்வு மூளையில் உறைக்கவே, குழந்தையைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு சற்றே ஓங்கி முதுகில் அறைந்தாள். குழந்தையின் வாயிலிருந்து சளியும், பாலும் கலந்து வெளியே வந்து விழுந்தன. குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்தது. ஆனால் நன்றாக மூச்சு விட ஆரம்பித்தது. குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு ஒரு விபத்திலிருந்து தப்பிய மன நிலையுடன் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அப்படியே உட்கார்ந்தாள்.

உள்ளே நுழைந்தான் கோபால். வழக்கம் போல கொடியில் இருந்த லுங்கிக்கு மாறிவிட்டு கைகால் கழூவிக்கொண்டு வந்து கட்டிலில் உட்கார்ந்தான். அவன் முகம் ஏதோ சரியில்லை.

இதோ பாரு புள்ளே, நான் உன்னைக் காதலிச்சுதான் கல்யாணம் செஞ்சிகிட்டேன். நீ படிச்சவ. ஆனா நான் படிக்காதவந்தான். இந்தக் குழந்தை  பொறந்துலேருந்து எனக்கு உன்கிட்ட நம்பிக்கையே போயிடிச்சு. நானும் கருப்பு நீயும் கருப்பு ஆனா, இந்தக் குழந்தை மட்டும் நல்லா சிவப்பா பொறந்திருக்கு. பெரிய மனுஷனுங்க வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கறா மாதிரி என்னாலே இருக்க முடியலை. அதான் உடைச்சு சொல்லிட்டேன். நீ உண்மையிலேயே என்னக் காதலிச்சிருந்தா, இப்போ இந்தக் குழந்தையோட ரத்தத்தையும் என் ரத்தத்தையும் சோதனை செஞ்சு பாக்கலாம். அதுக்கு இப்போ நிறைய வசதி வந்திடிச்சு. அப்பிடிச் செஞ்சி இந்தக் குழந்தை என்னோடதுதான்னு சொல்லிட்டாங்கன்னா அதுக்கு அப்புறம் நாம் சேந்து வாழலாம். அப்போதான் என் சந்தேகம் தீரும் என்றான்.

மனத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை அப்படியே முழுங்கிவிட்டு யோவ், என்னா பேசறேனு புரிஞ்சுதான் பேசுறியா   சரி இப்போ சொல்றேன் நீ சொன்னா மாதிரி இப்போ நிறைய வசதி வந்துடுச்சி இது உன் குழந்தையான்னு சோதிச்சுப் பாக்க. ஆனா ஒரு பொண்ணு மனசுலே என்னா இருக்குன்னு சோதிச்சுப் பாக்க எந்த நவீன கருவியும் வரலைய்யா! உன்னையை மாதிரி சந்தேகப்படறவனுக்கு உடம்பு மேலே சந்தேகமா மனசு மேலே சந்தேகமான்னு தெரியலை!

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி குழந்தைக்கு பொறை ஏறிடிச்சு. சளி தொண்டையிலே அடைச்சிகிட்டு. மூச்சு விட முடியாமே தவிச்சிது. குழந்தையோட ரெண்டு காலையும் பிடிச்சிகிட்டு முதுகிலே  ஒரு அறை விட்டேன் தொண்டையிலே அடைச்சிக்கிட்டிருந்த மொத்த சளியும் வெளியே வந்து  விழுந்திடிச்சு. ஆனா உன்னைய மாதிரி ஆம்பிள்ளையை தலைகீழா கட்டி, அடி அடின்னு அடிச்சாலும் உன் மனசில இருக்கற சந்தேகம் வெளியே போகாதுய்யா. காலம் முழுதும் உறுத்திக்கிட்டேதான் இருக்கும். இனிமே காலம் முழுதும் மூச்சு முட்டிகிட்டேதான் இருக்கும். உன்னையை மாதிரி ஆம்பிள்ளைங்களுக்கு தெளிவா மூச்சு விட முடியாது.

ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன் இது வரைக்கும்  உன்னைத் தவிர வேற யாரும் என் மனசையும் தொடலே, உடம்பையும் தொடலே.  நான் மனசால வேற ஒருத்தன்மேலே ஆசைப்பட்டு அவனோட படுத்தா, நீ சொல்றியே அதே நவீனத்தை உபயோகிச்சு விஞ்ஞானத்தாலேயும் கண்டுபிடிக்க முடியாதபடி கெட்டுப் போக என்னாலே முடியும். யார் நெனைச்சாலும் கண்டுபிடிக்க முடியாது. ஒரு பொண்ணை அவளா நெனைச்சா தவிர வேற யாராலேயும் கெடுக்க முடியாதுய்யா உனக்கு இதெல்லாம் புரியாது. எப்போ உன் சந்தேகம் தீருதோ, அன்னிக்கு வா. மனசிருந்தா உன்னைய ஏத்துக்கறேன்.

இப்போ மொதல்லே இந்த வீட்டை விட்டு வெளியே போய்யா! என்றாள் தீர்மானமாக.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book