26 பணம்

 

காலங்காத்தாலே எழுந்து அலுவலகத்துக்கு போற அவள் கணவன் ரமேஷுக்குப் பல் தேய்க்கிற பேஸ்ட்டுலேருந்து, துண்டுலேருந்து கர்சீப் வரைக்கும் எடுத்துக் கையிலே குடுத்து இருக்கறது ரெண்டு குழந்தைங்கன்னாலும் பெரியவன் கிஷோர் பள்ளிக்கூடம் போறான் அவங்க ரெண்டு பேருக்கும் வேணுங்கறதையெல்லாம் எடுத்துக் குடுத்து, வயித்துக்குக் காலை உணவு குடுத்து மதியம் உணவுக்கு வேண்டியதையெல்லாம் தயாரிச்சு டப்பாவிலே போட்டுக் குடுத்து தலையை வாரி, சீருடை போட்டுவிட்டு அனுப்பறதுக்குள்ளே மூச்சு முட்டிப் போகுது

என்றபடியே புடவைத் தலைப்பால் நெற்றியைத் துடைத்தபடி இதோ இது இருக்குதே என் செல்லக் குட்டி. இவனுக்குக் கிட்டத்தட்ட ஒண்ணரை வயசாகுது. இடுப்பை விட்டுக் கீழே இறங்க மாட்டான். இன்னும் மழலையே மாறலை. ஆனா பேசற பேச்சு இருக்கே யப்பா செம வாலு எப்பிடித்தான் அந்தக் காலத்திலே பத்து பதினொண்ணுன்னு பெத்து வளத்தாங்களோ இதுக்கு வயித்துக்கு குடுத்துட்டு வரேன் அப்போதான் தூங்குவான்,

இல்லேன்னா நம்மளைப் பேச விடாம வம்பு பண்ணுவான் என்றபடி பருப்புச் சாதத்தை ஊட்டி அவன் தூங்க ஆரம்பித்ததும் கீழே விட்டுட்டு, என்ன பண்றது எனக்கு காலம் இப்பிடியே போவுது என்று சலித்துக்கொண்டே பெருமூச்சு விட்டாள் வசந்தா ஏதோ மதிய வேளையாச்சே கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசிட்டுப் போலாம்னு வந்தா, தினோம் நீ செய்யிறதையெல்லாம் சொல்லிச் சொல்லிப் புலம்பியே பொழுதை ஓட்டற” என்றாள் சுசீலா!

ஒரு மனுஷின்னா அவளுக்கும் கொஞ்சம் ஓய்வு வேணும், மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும் சரி அதையே நெனைச்சிகிட்டு இருக்காதே, மனசை ப்ரீயா விடு , என்றாள் சுசீலா. பணம் தொலைக்காட்சித் தொடர் ஓடிக்கொண்டிருந்தது. இருவரும் ஹாலில் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தனர். அந்தத் தொடரில் ஒரு பெண் எனக்குப் பணம் முக்கியமில்லே. ஆனா என்னை அவமானப்படுத்தின அந்தத் தியாகுவைப் பழி வாங்காம ஓயமாட்டேன் அவனை வாழ விடமாட்டேன் அவன் எங்க போனாலும் துரத்தித் துரத்திப் பழிவாங்குவேன் என்றாள் ஆண்பிள்ளைக் குரலில் வெறியோடு.

இந்தப் பொம்பளையப் பார்த்தவொடனே ஞாபகம் வருது. உனக்குத் தெரியுமா நம்ம தெருவிலே கோடீ வீட்டுலே இருக்காளே வத்சலா அவ புருஷன் ராஜா வெஷம் குடிச்சிட்டானாம் என்றாள் சுசீலா. ஐயய்யோ ஏன் என்ன ஆச்சு என்றாள் வசந்தா! வத்சலாவோட புருஷன் ராஜா சீட்டு நடத்தினாரு இல்லே அதை ஒழுங்கா நடத்தி அதுலே லாபம் வந்தா பரவாயில்லே.

அவங்க ஆடின ஆட்டம் இருக்கே, எல்லாருடைய பணத்தையும் வாங்கி வெளிநாட்டு டீவீ என்னா நெக்லஸ் என்னா அப்பிடியே மினுக்கினா அது போதாக்குறைக்கு வீட்டை இடிச்சு பெரிய பங்களாவா மாத்திக் கட்டினாரு கடைசீயிலே வரவேண்டிய பணமெல்லாம் வரலைன்னு சொல்லிட்டு யாருக்கும் பணம் குடுக்காம ஏமாத்தி இருக்காரு. எல்லாரும் போலீஸ்லே புகார் குடுத்துட்டாங்க. ஆனா அவராலே பணம் குடுக்க முடியலை. அவருக்கு ஏதோ நஷ்டமாம், என்ன செய்யிறதுன்னே தெரியலையாம், அதுனாலே அந்த ஆளு விஷம் குடிச்சிட்டான் என்றாள் சுசீலா.

ஐயய்யோ நான் கூட என் புருஷன் ரமேஷுக்கத் தெரியாம அவருகிட்ட சீட்டுகட்டி இருக்கேன் அப்போ என் பணமும் வராதா என்று அதிர்ந்தாள் வசந்தா.
அதெல்லாம் கவலைப்படாதே. அவங்க கம்பெனிலேருந்து ஆளுங்கல்லாம் வந்திருக்காங்க இவுரு இப்பிடிச் செஞ்சது அவரு வேலை செய்யிற கம்பனிக்கே தெரிஞ்சு போச்சாம். அதுனாலே அந்தக் கம்பனி இவரை வேலையை விட்டு எடுத்துட்டாங்களாம். வேலையை விட்டு அனுப்பும்போது அந்தக் கம்பனி இவருக்கு சேர வேண்டிய பெரிய தொகையைக் குடுத்தாங்களாம். அந்தப் பணத்திலே எல்லாருக்கும் திருப்பிக் குடுத்துடறேன்னு அந்த ஆளு ராஜா சொல்லி இருக்காரு என்றாள் சுசீலா.

திடீர்ன்னு யாரோ மூச்சுத் திணறுவது போல் சத்தம் கேட்டு, வசந்தா எழுந்து ஓடிப் போய்ப் பார்த்தாள். அவளோட குழந்தை திருதிருன்னு முழிச்சிண்டு மூச்சுத் திணறிக்கொண்டிருந்தது. பக்கத்தில் மண் உண்டியல் கீழே விழுந்து நொறுங்கியிருந்தது. ஐயய்யோ குழந்தை இந்த உண்டியல்லேருந்து கீழே விழுந்த காசை எடுத்து வாயிலே போட்டுண்டான் போல இருக்கு அது தொண்டையிலே மாட்டிண்டு அவனுக்கு மூச்சு திணறுது என்று பதறினாள் சுசீலா.

வசந்தா பதறிப்போய் குழந்தையின் வாயில் விரலை விட்டு எப்படியாவது காசை எடுத்து விடலாம் என்று முயன்றாள். குழந்தையின் வாயிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. மேலும் பதறிய வசந்தா அழ ஆரம்பித்தாள். நீ ஒண்ணும் பதறாதே. நான் ஆட்டோ கூப்படறேன், நாம ரெண்டு பேரும் டாக்டர் கிட்ட போயி எப்பிடியாவது குழந்தை தொண்டையிலே மாட்டிண்டு இருக்கற காசை வெளியே எடுத்துடுவோம் என்றபடி வாசலுக்கு ஓடிவந்து ஒரு ஆட்டோ பிடித்தாள் சுசீலா. அதற்குள் வசந்தா குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு, ஓடி வந்து ஆட்டோவில் ஏறினாள்.

ஆட்டோ அவர்கள் வீட்டுக்கருகே இருந்த மருத்துவமனைக்கு விரைந்தது. அங்கே இதோ பாருங்க, இப்போ டாக்டரெல்லாம் பிசியா இருக்காங்க. நீங்க உடனடியா பெரிய ஆஸ்பத்திரிக்கு போயிடுங்க என்றாள் நர்ஸ். ஆட்டோ பெரிய ஆஸ்பத்திரியை நோக்கி ஓடியது. உள்ளே டாக்டரிடம் ஓடினாள் வசந்தா.
வசந்தா சொன்ன விஷயத்தை கேட்ட அவள் கணவன் ரமேஷ் அலுவலகத்தில் விஷயத்தைச் சொல்லிவிட்டு உடனடியாகப் பெரிய ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.

முதலில் குழந்தையைப் பார்த்த டாக்டர் இதோ பாருங்க, ஒண்ணும் பதறாதீங்க என்றபடி எக்ஸ்ரே எடுத்தார். எக்ஸ்ரேவில் ஒண்ணும் தெரியலைம்மா. ஆமா உங்களுக்கு நிச்சயமா தெரியுமா குழந்தை காசை வாயிலே போட்டுண்டானா என்றார். தெரியலை டாக்டர் நான் கூட தொண்டையிலே விரலை விட்டுப் பார்த்தேன். என் விரலுக்கும் ஒண்ணும் அகப்படலை. ஆனா வாயிலேருந்து ரத்தமா வந்துது என்றாள் வசந்தா.

சரி நாம் எதுக்கும் இன்னொரு முறை ஸ்கேன் பண்ணிப் பாத்துடலாம். பூந்தமல்லி நெடுஞ்சாலையிலே ஒரு ஸ்கேன் செண்டர் இருக்கு. நான் எழுதித் தறேன். மத்த இடங்கள்ளே அதிகமா பணம் வசூலிப்பாங்க நீங்க இங்கே போயி ஸ்கேன் பண்ணிண்டு சீக்கிரம் வாங்க என்றபடி தன்னுடைய கைப்பேசியில் பேச ஆரம்பித்தார்.

மீண்டும் வாயிலில் நின்றிருந்த ஆட்டோவிலே ஏறி இதோ பாருங்க உடனடியா இந்த ஸ்கேன் செண்டருக்குப் போங்க என்றாள். அங்கே ஸ்கேன் எடுத்து, அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டைக் கொடுத்தவுடன் மீண்டும் பெரிய ஆஸ்பத்திரிக்கே வந்து ஆட்டோக்காரருக்கு 200 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, டாக்டரிடம் ஸ்கேன் ரிப்போர்ட்டைக் காண்பித்தாள் வசந்தா.

ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்த டாக்டர் “ஸ்கேன்லே கூட ஒண்ணும் தெரியலையே என்னா செய்யிறது எனக்கென்னவோ குழந்தை காசு தொண்டை வழியா வயித்துக்கு போயிருக்கும்னு தோணுது. நீங்க காசை எடுக்க, குழந்தை வாயிலே விரலை விட்டீங்க இல்லே அதுனாலே தொண்டையிலே உங்க நகம் கீறி ரத்தம் வந்திருக்கும் என்றார் டாக்டர்.

வசந்தா பதறினாள் கவலைப்படாதீங்க. காசு தானாவே மோஷன் போகும்போது வெளியிலே வந்துடும். அது்க்கு நடுவுலே ஏதாவது ஆச்சுன்னா உடனே குழந்தையை மறுபடியும் அழைச்சிட்டு வாங்க பாப்போம் என்றார் டாக்டர்.
குழந்தை கஷ்டப்பட்டு ம்ம்மா என்றான். வசந்தா குழந்தையின் அருகில் வந்து பதறியபடி என்னடா கண்ணா என்றாள் பொங்கி வந்த அழுகையை அடக்கியபடி.

குழந்தை ரமேஷை நோக்கி, ப்பா என்றது. ரமேஷ் கண்ணில் கண்ணீருடன் குழந்தையை நோக்கிக் குனிந்தான். குழந்தை வசந்தாவைப் பார்த்துக் கையை நீட்டியது. அதில் ஒரு முழு ஒரு ரூபாய் பளிச்சென்று மின்னியது. ம்மா நானு பத்திரமா வெச்சிண்டு இக்கறேன் காசு உனக்கு தரமாத்தேன் போ காசு என்னுது என்று சொல்லிவிட்டுச் சிரித்தது!

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *