17

 

 
தமிழ்த்தேனீ “ பம்பரம் “

நீங்க எடுத்துகிட்ட எந்த வழக்கிலேயும் இது வரைக்கும் நீங்க தோத்ததே இல்லையே, அது எப்பிடி சார் என்கிற நிருபரின் கேள்விக்கு வக்கீல் சட்ட நாதன் நான் அர்த்தநாரி மாதிரி. சட்டத்தை பாதி என் பேருலேயும் மீதியை என் மூளையிலேயும் வெச்சிருக்கேன் அதனாலே இருக்கும் என்று அகங்காரமாகச் சிரித்தார்.

சட்டநாதன் சோபாவில் உட்கார்ந்திருந்தார். அவர் எதிரே அவருக்கு மிகவும் பிடித்தமான மேல்நாட்டு மது வகைகள், மேசையில் இடம் பிடித்திருந்தன. அவருடைய பால்ய நண்பர் ரகுவரன் உட்கார்ந்து, அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.
என்னடா அப்பிடிப் பாக்கறே என்றார் சட்டநாதன்.
டேய் சட்ட நாதா குற்றவாளின்னு தெரிஞ்சும் உன்னை மாதிரி வக்கீல் எல்லாம் மனசாட்சியை அடகு வெச்சிட்டு, பணத்துக்காகவோ, பெருமைக்காகவோ உங்க வாதத் திறமைங்கற திமிர்லே அந்தக் குற்றவாளியைச் சட்டத்தோட பிடியிலேருந்து விடுவிச்சு வெளியிலே கொண்டு வர்றீங்களே உங்களை மாதிரி மனுஷங்களாலேதான் நம்ம நாடு இவ்ளோ மோசமா போச்சு. குற்றவாளின்னு தெரிஞ்சா நிச்சயமா பணத்துக்காகவோ வேற காரணத்துக்காகவோ வாதாட யாரும் வராம இருந்தாலே இந்த நாடு தானா உருப்படும். குற்றங்கள் குறையும்.

அதுனாலேதான் சொல்றேன் இதெல்லாம் விட்டுட்டு நேர்மையா வாழ முயற்சி செய்யேண்டா என்றார் ரகுவரன். அயல்நாட்டு மதுவை ருசி பார்த்துக்கொண்டிருந்த சட்டநாதன், கண்கள் சிவக்க நிமிர்ந்தார். இந்தக் கேள்வியைக் கேட்டது நீ என் ப்ரெண்ட்.. அதுனாலே தப்பிச்சே! இல்லேன்னா நடக்கறதே வேற சரிடா அவன் அயோக்கியன்னு எல்லாருக்கும் தெரியும். இவ்வளவு ஏன், நீதிபதிக்கே தெரியும். அப்புறம் ஏன்டா கேஸ் கோர்ட்டுன்னு வராங்க. பொழைப்புடா.

யாருக்கும் இங்கே நீதியை நிலை நாட்டணும்கிற துடிப்பு இல்லே. எல்லாமே பணத்துக்குத்தான்டா. அதை விடு நீ அடிக்கடி சொல்லுவியே ஆண்டவன், அவனுக்குத் தெரியாதா இவன் அயோக்கியன்னு. அப்புறம் ஏன்டா சும்மா இருக்கான் ஆண்டவன் எதுக்கு எங்களை மாதிரி இருக்கறவங்களையும் படைச்சு இவங்க மாதிரி குற்றவாளிங்களுக்கு விடுதலை வாங்கிக் குடுக்கறாரு உங்க ஆண்டவன்

சத்தியம் என்னிக்குமே ஜெயிக்கும். தெய்வம் திடீர்ன்னு ஒரு நாள் அவதாரம் செய்வார். துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம் செய்வார். இதெல்லாம் நீ சொல்லிச் சொல்லியே எனக்கு மனப்பாடம் ஆயிடுத்து. கோர்ட்லே கூட நான் மறக்கறதே இல்லே. ரொம்ப நுணுக்கமா வாதாடிட்டு கடைசீயிலே நானும் இதே வார்த்தையைச் சொல்லித்தான் ஜட்ஜோட மனசுலே என் கட்சிக் காரன் நேர்மையானவன்னு ஆழமா பதிய வெச்சி ஜெயிக்கிறேன். ஜட்ஜும் மனுஷந்தானேடா. என்னோட வார்த்தை ஜாலத்துக்கு மயங்கி அவரும் நான் ஏற்படுத்தின சந்தேகத்தோட பலனா என் கட்சிக்காரனுக்குச் சாதகமா தீர்ப்பு சொல்றார்,

எங்கடா போச்சு உன் தெய்வம் ஏன்டா வரலை அந்த அநீதியைத் தடுக்க உன் தெய்வமே பணத்துக்குதான்டா பயப்படுது. மனுஷன் கண்டு பிடிச்ச பனத்துக்குதாண்டா வெலை போகுது. உங்களோட சக்தி வாய்ந்த தெய்வத்தோட விக்ரகங்களையெல்லாம் கடத்தினான். தெய்வத்தோட விக்ரகத்திலேருந்து எல்லா நகையையும் கழற்றி வித்தான். தெய்வங்கள் இருக்கிற கோயிலோட சொத்தையெல்லாம் தன் பேருக்கு மாத்திக்கிட்டான். கோடி கோடியா சம்பாதிச்சான், ஒரு நாள் மாட்டிக்கிட்டான். அவனை நான்தாண்டா என்னோட வாதத் திறமையாலே நிரபராதீன்னு நிரூபிச்சேன். ஏன்டா அப்போ அந்தச் சாமி, தானே பாதிக்கப்பட்டும் வரலை சாட்சி சொல்ல

ஒரு விஷயம் தெரியுமா எங்க அப்பா வக்கீல். நேர்மையான வக்கீல். நியாயத்துக்குப் புறம்பா ஒரு வழக்கையும் எடுக்க மாட்டார். அவருக்கு எத்தனை பேர் சந்தர்ப்பம் கொடுத்தாங்க கடைசீ வரைக்கும் மனசுக்குள்ளே புழுங்கியே செத்தார். அவருக்கு எல்லாரும் முட்டாள்னு பட்டம் கொடுத்தாங்க. கேசும் வரலே, சம்பாத்தியமும் வரலே! அப்போ எங்கடா போச்சு உங்க தெய்வம் அப்போ புரிஞ்சிகிட்டேன் நீதி நேர்மை, நியாயம் இதெல்லாம் சும்மா, பணம் மட்டும்தான் தெய்வம் அப்பிடீன்னு அன்னிக்கு முடிவெடுத்தேன் நானும் வக்கீலுக்குப் படிச்சு பணம் சம்பாதிக்கணும்னு. இப்போ புத்திசாலி வக்கீல்ன்னு பேரெடுத்திருக்கேன். எங்கேடா உங்க சாமி என்றார் தள்ளாட்டத்துடன் சட்டநாதன்.

டேய் சட்டநாதா ஜெயிக்கிறோம்கிற திமிர்லே பேசறே. நாத்திகவாதத்துக்குப் பலம் அதிகம். நாத்திகவாதம்கிறது ஒரு வெறிபிடிச்ச பலம் உள்ள மிருகம். அது இப்போ புரியாது. சரி சரி அதிகமா குடிச்சு உடம்பைக் கெடுத்துக்காதே என்றபடி சட்டநாதனைக் கைத்தாங்கலாக அழைத்துப் போய்ப் படுக்க வைத்துவிட்டு, போர்வையைப் போர்த்திவிட்டு நான் நாளைக்கு வரேன் குட் நைட் என்றபடி கிளம்பிப் போனார் ரகுநாதன்.

மறுநாள் நீதி மன்றத்துக்கு விடுமுறை. காலையில் தினசரியைப் படித்துக்கொண்டிருந்தார் சட்டநாதன். ரகுவரன் குட்மார்னிங் என்று கூறியபடியே வந்தார். வா ரகு நேத்திக்கு நைட் உன்கிட்ட தாறுமாறா பேசினேன். அதெல்லாம் உன்னைப் புண்படுத்தணும்கிற நோக்கத்திலே பேசலை. டேய் ரகு என்னை மன்னிச்சிருடா என்றார் சட்டநாதன்.

அடப் போடா! இப்பிடித்தான் முப்பது வருஷமா பேசிண்டு இருக்கோம். இன்னிக்கு என்ன புதுசா நீ வேற நான் வேறன்னு நான் இது வரைக்கும் நெனைச்சதில்லே. ஆனா எனக்கு ஒரு பயம். நீ எந்த விதத்திலேயும் பாதிக்கப்படக் கூடாது! உனக்கு எந்தக் கெடுதி வந்தாலும் என்னாலே தாங்க முடியாது! டேய் சின்ன வயசிலே தட்டாமாலை சுத்துவோமே நினைவிருக்கா! அதிகமா சுத்தினா தலை சுத்தும் மயக்கம் வரும். ஆண்டவன் ஒரு பெரிய அடியைக் குடுக்கறதுக்கு முன்னாடி ஒரு பெரிய கர்வத்தைக் குடுப்பான்னு சொல்வாங்க அதுக்குத்தான்டா பயப்படறேன் என்றார் ரகுவரன்.

ரகு பிறப்புன்னு ஒண்ணு இருந்தா இறப்புன்னு ஒண்ணு உண்டு. இதை நான் நம்பறேன். என்னோட வாழ்க்கை முடியறதுக்குள்ளே என் மூளைக்குச் சவாலான ஒரு கேசை எடுத்து நடத்தி அதுலே ஜெயிக்கணும்கிற ஆசை. அதுக்கு இப்போ சவால் வந்திருக்கு. இந்த பேப்பரைப் படி, இதுலே தூக்கு தண்டனைக் கைதிக்குத் திருமணம் அப்பிடீன்னு ஒரு செய்தி வந்திருக்கு. நிச்சயமா அவன் சாகப் போறான்னு தெரிஞ்சும் எப்பிடிடா அந்தப் பொண்ணு தைரியமா இவனுக்குக் கழுத்தை நீட்றா! என் திறமைக்குச் சவால் இந்தச் செய்தியிலே இருக்குடா! இந்தச் செய்தியை படிக்கிறேன் கேளுடா.

அனாதையான தன்னை எடுத்து வளத்து ஆளாக்கிய தெய்வத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த தாயின் மகனான இந்தச் செல்வத்தை மணக்கப் போகிறேன். இவரால் கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் முருகனைவிட இவர் நேர்மையானவர் என்பதை என் மனம் அறியும் அப்பிடீன்னு ஸ்டேட்மெண்ட் குடுத்திருக்காடா இந்தப் பொண்ணு மல்லிகா! நான் இந்தப் பொண்ணோட தைரியத்துக்காகவே, தியாகத்துக்காகவே என் மூளையை உபயோகிச்சு இவன் குற்றவாளி இல்லேன்னு நிரூபிச்சு வெளியிலே கொண்டு வந்து இந்தப் பொண்ணோட வாழவைக்கப் போறேன்” என்றார் சட்டநாதன்.

மறுநாள் தினசரிகளிலும் தொலைக்காட்சிகளிலும் பிரதான செய்தியாக செஷன்ஸ் கோர்ட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி செல்வத்தின் சார்பாக மேல் கோர்ட்டில் சட்டநாதன் ஆஜராகிறார். செல்வத்தை விடுவிப்பேன் சட்டநாதனின் சபதம் என்று ஏகத்துக்கும் முழங்கியது. நாடே பரபரப்பானது! நீதிமன்ற வளாகமே மக்கள் வெள்ளத்தால் மூழ்கியது!
அன்று சட்டநாதனே திணறிப் போனார்.

அந்த அளவுக்கு அந்தக் குற்றவாளியின் மேல் சாட்சியங்கள் வலுவாக இருந்தன. ஆனால் உண்மையில் அவன் குற்றவாளியே அல்ல என்பது சட்டநாதனுக்கு நிதரிசனமாகத் தெரிந்தது. அரசியல் விளையாடியுள்ளது. அவனுக்கு எதிராகப் பல பெரிய பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் செயல்பட்டு வேண்டுமென்றே அவனைச் சிக்க வைத்திருப்பது புரிந்தது, ஆனால் சட்டத்தின் முன், சாட்சியங்களின் முன் அவன் ஒரு கொடூரமான கொலையைச் செய்தவன் என்று நிரூபிக்கப்பட்டு இருந்தது.

ஒரு கணம் தன்னை மறந்து சட்டநாதன் இறைவா இவன் குற்றமற்றவன். இவன் ஒருவனையாவது விடுவித்து என் பழைய கறைகளை நான் போக்கிக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாக இவனை விடுவிக்க நீதான் எனக்கு வழி சொல்ல வேண்டும் என்று மனதுக்குள் இறைஞ்சினார் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

அப்போது அவருடைய உதவியாளர் துப்பறியும் தனியார் நிறுவனத்திலிருந்து வந்த ஒரு தஸ்தாவேஜை கொண்டு வந்து அவரிடம் நீட்டினார். அந்த தஸ்தாவேஜில் இரண்டு நற்செய்தி இருந்தது, சட்டநாதனுக்குத். தூரத்தில் பர்வையாளர்களில் ஒருவளாகப் பதைபதைப்புடன் உட்கார்ந்திருந்த மல்லிகாவைத் திர்க்கமாக ஒரு முறை பார்த்தார். அவர் கண்கள் ஒளிர்ந்தன. அந்த டிடெக்டிவ் ஏஜன்சியின் கண்டுபிடிப்பு, அந்த மல்லிகா சிறு வயதில் காணாமல் போன அவருடைய மகள்! மற்றொரு செய்தி அவர் வெற்றிக்கு வழிவகுத்த முக்கியமான செய்தி.

சட்டநாதன் பிரகாசமானார். வாதம் சூடுபிடிக்க சூடுபிடிக்க, சட்டநாதன் வெறிபிடித்த வேங்கையானார். சட்டம் அவர் பிடியில் பலி ஆடாகியது, வேங்கை ஆட்டைக் குதறிக்கொண்டிருந்தது. அதன் ஆக்ரோஷத்தில் சட்டத்தில் மேலும் பல ஓட்டைகள் விழுந்தன. சட்டம் திக்குமுக்காடியது. கடைசியில் ஆடு குதறப்பட்டது.. சட்டம் துகள்களாய்ச் சிதறி, குருதி வழிந்து இறந்து போனது.
கனம் நீதிபதி அவர்களுக்கு ஒரு கோரிக்கை. ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் விடுதலை செய்யப்படலாம்.

ஆனால் ஒரு நிரபராதி கூடத் தண்டிக்கப்படக் கூடாது. ஆகவே நான் ஒரு முக்கியமான சாட்சியை இங்கே விசாரிக்க அனுமதி கோருகிறேன் என்று கோரிக்கை வைத்தார், நீதிபதி அனுமதி வழங்கினார். அந்த முக்கியமான சாட்சி! முருகன் ! ஆம் குற்றவாளி செல்வத்தால் கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் முருகன்! உயிருடன் இருக்கிறார், அவர் கொலை செய்யப்படவே இல்லை. இவரைக் கடத்தி ஒளித்து வைத்து, கொலைசெய்யப்பட்டதாக சட்டத்தை நம்பவைத்து ஏற்கெனவே இறந்த ஒருவரின் உடலை, முகத்தை சிதைத்து முருகன் என்று நம்ப வைத்து சதி நடத்தி இருக்கிறார்கள் சிலர். அவற்றுக்கான ஆதாரங்கள் இதோ இந்த தஸ்தாவேஜில் உள்ளன என்று அவற்றை நீதிபதியிடம் அளித்தார் சட்டநாதன்.

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் முருகன், வந்து நின்றான். நீதிமன்றம் வாயடைத்து அமைதி காத்தது.. முருகன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான்
ஆகவே கனம் கோர்ட்டார் அவர்களே இந்த செல்வம் நிரபராதி. அநியாயமாக அவர் செய்யாத குற்றத்துக்குத் தூக்குதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அவரை எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும் என்று கூறிவிட்டு, பெருமிதத்தோடு ஒரு முறை மல்லிகாவை பார்த்துவிட்டு உட்கார்ந்தார் சட்டநாதன்
திரு. சட்டநாதன் அவர்கள் நீதிமன்றத்துக்கு ஏற்பட இருந்த இழுக்கை மிகச் சாமர்த்தியமாக உடைத்தெறிந்திருக்கிறார்.

அவரை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது மற்றும் செல்வம் அவர்களை நிரபராதி என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துவிட்டார். ஆகவே இவருக்கு வழங்கப்பட்ட தண்டனை தவறானது, இவர் கொலை செய்யவே இல்லை என்பது உறுதியாகி விட்டதால் இவரை விடுவிக்கக் உத்தரவிடுகிறேன் என்று மேலும் படித்துக்கொண்டே இருந்தார். சட்டநாதன் வாழ்க என்ற குரல்விண்ணை முட்டியது!.
மறுநாள் ரகுவரன், சட்டநாதன், மற்றும் மல்லிகா செல்வம் ஆகியோர் உட்கார்ந்திருந்தனர். செல்வமும் மல்லிகாவும் தழுதழுத்த குரலில் நன்றி கூறிக்கொண்டிருந்தனர். அவர்களை இடைமறித்து சட்டநாதன், பேச ஆரம்பித்தார்.
“என்னோட மூளைக்கும் படிப்புக்கும் கிடைச்ச வெற்றி இந்தச் செல்வம். இறைவனோட அருள் என் மகள் மல்லிகா. அவளுக்கு ஏற்ற மாப்பிள்ளை செல்வம் என்று கூறிவிட்டு எப்பிடி என்றது போல் பார்த்தார் ரகுவரனை.

டேய் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போ சொல்லுடா உன் வாயாலே தர்மம் ஜெயிக்கும்னு என்றார் ரகுவரன்.
டேய் ரகு உண்மைதாண்டா. தர்மம் தோக்கறா மாதிரி தெரியும். ஆனா எப்பவும் ஜெயிக்கும் .அது மட்டுமில்லே தெய்வம் இருக்குடா என்றார் நெகிழ்வுடன்.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book