33 பூடகம்

 

ராமநாதனிடம் வந்து தாத்தா ஒரு கதை சொல்றியா என்றாள் பேத்தி ரம்யா. அவளுக்குத் தினமும் ஒரு கதை சொல்லணும். சரிம்மா வா. இங்க வந்து உக்காரு. நான் உனக்கு நிறைய கதை சொல்லி இருக்கேன். இன்னிக்கு வித்யாசமா ஒரு கதை சொல்லப் போறேன். நல்லா கவனிக்கணும், சரியா என்று கதை சொல்லத் தொடங்கினார்.

உன் தாத்தா, அதான் நானு. நிறையப் படிக்கலே அதுனாலே ஒரு பேக்டரிலே தொழிலாளியா வேலை செஞ்சேன் ஏன் தாத்தா பேக்டரின்னா என்னா என்றாள் ரம்யா. அது வந்தும்மா தொழிற்சாலை என்றார். அப்பிடியா என்று புரிந்தவள் போல் கேட்டுவிட்டு, அது சரி தொழிற்சாலைன்னா என்னா என்றாள். திணறினார் ராமநாதன்.

பிறகு சமாளித்துக்கொண்டு, தொழிற்சாலைன்னா எப்பிடி சொன்னா உனக்குப் புரியும். சரி இப்பிடிச் சொல்றேன். தொழிற்சாலைன்னா தொழில் நடக்கற இடம். அதாவது இப்போ நம்ம வீட்டிலே டீவீ இருக்கு, மின் விசிறி இருக்கு, ஃப்ரிட்ஜ் இருக்கு. இதெல்லாம் ஒரு இடத்திலே தயார் செய்வாங்க. அந்த இடத்துக்கு பேரு தொழிற்சாலை என்றார். ஓ அப்பிடியா சரி கதையைச் சொல்லுங்க என்றாள் ரம்யா.

அது மாதிரி காரெல்லாம் தயாரிக்கிற ஒரு தொழிற்சாலையிலே நான் வேலை செஞ்சேன். அங்கே வேலை செய்யற என்னை மாதிரி தொழிலாளர்களுக்கு நன்மை செய்யறதுக்காக அந்த பேக்டரிலே ஒரு சங்கம் இருந்துது. ஒரு நேரத்திலே அந்தச் சங்கத்துக்கும் மொதலாளிகளுக்கும் தகராறு வந்துது. அந்தத் தகறாரைப் பயன்படுத்தி வேற ஒரு சங்கமும் அந்தப் போராட்டத்திலே கலந்துகிச்சு .
ஓ அப்பிடியா சரி சரி சங்கம்னா என்னா என்றாள் ரம்யா. ராமநாதனின் மருமகள் இப்பிடி குறுக்கே குறுக்கே கேள்வி கேட்டா, தாத்தா எப்பிடிம்மா கதை சொல்லுவாரு என்றாள்.

இல்லேம்மா இப்பிடி கேள்வி கேக்கறதுதான் நல்லது, அவ நான் சொல்றதைக் கவனிக்கறா அப்பிடீன்னு அர்த்தம். இது மாதிரி குழந்தைங்க கேக்கற கேள்விகளுக்கு நாம சரியா பதில் சொல்லி அவங்களுக்கு புரிய வைக்காமதான் நம்மோட குழந்தைங்களுக்கு நம்ம கலாச்சாரம்னா என்னான்னே புரியாம போயிடிச்சு என்றவர், பேத்தியிடம் திரும்பினார்.

இதோ பாரு ரம்யா உனக்குச் சந்தேகம் வர இடத்திலே கேள்வி கேளு. தாத்தா எனக்குத் தெரிஞ்சவரைக்கும் பதில் சொல்றேன். தெரியலைன்னா யாரையாவது கேட்டு உனக்குப் புரியறா மாதிரி சொல்றேன். சரியா இப்போ சங்கம்னா என்னான்னு சொல்றேன். அந்தத் தொழிற்சாலையிலே நிறைய பேரு வேலை செஞ்சோம். முதளாளிகிட்ட எடுத்துச் சொல்லி எங்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்ய ஒரு தலைவரை வெச்சிகிட்டு அவர் கீழே அவருக்கு உதவி செய்யச் சில பேரை வச்சு அந்த அமைப்புக்கு சங்கம்னு பேரு வெச்சோம்.

ஆக மொத்தம் அந்த பேக்டரிலே வேலை செய்யிற தொழிலாளருக்கு ஆதரவா ஒரு சங்கமும், மொதலாளிக்கு ஆதரவா ஒரு சங்கமும் வேலை செய்ய ஆரம்பிச்சுது. மொத்தத்திலே மொதலாளிகள்லாம் ஒண்ணா சேர்ந்து நாங்க தொழிற்சாலையை மூடப் போறோம்ன்னு அறிவிச்சிட்டாங்க. அப்பிடி தொழிற்சாலையை மூடக் கூடாதுன்னு எங்க சங்கம் போராட்டம் ஆரம்பிச்சிது

இதோட விளைவு ரெண்டு சங்கத்துக்காரங்களும் அடிதடிலே இறங்கினாங்க. அந்தத் தொழிற்சாலையிலே வேலை செய்யற எங்களையெல்லாம் போட்டு அடிச்சாங்க, பல பேரை வெட்டினாங்க, ஆக மொத்தத்திலே, நாங்க எல்லாம் உயிருக்குப் பயந்து ஓடிக்கிட்டே இருந்தோம். அப்போ உங்க பாட்டி என்னோட இல்லே. உங்க அப்பாவைப் பெத்தெடுக்கறதுக்காக டெல்லி தாண்டி ஒரு ஊரிலே இருந்த அவங்க அம்மா அப்பாவோட போய்த் தங்கி இருந்தாங்க. அப்போ உங்க அப்பா கணேசன் பொறந்தாரு. ஆனா அந்த நேரத்திலே என்னாலே உங்க அப்பாவைக் கூட போயி பாக்க முடியலை.

திடீர்ன்னு ஒரு நாள் தொழிற்சாலை மூடிட்டதா அறிவிச்சுட்டாங்க. இருந்த வேலையும் போயிடிச்சேன்னு எனக்குக் கவலை, பொறந்த குழந்தையைப் போயி பாக்க முடியலையேன்னு கவலை. எல்லாம் சேந்து நானு இங்கே மெட்ராசிலே இருந்தேன். ஒருநாள் என்ன வேணா ஆகட்டும் என் பையனை அதான் உங்க அப்பாவைப் போயி பாக்கலாம்னு கையிலே இருந்த காசையெல்லாம் திரட்டி, டெல்லிக்கு ஒரு டிக்கட் எடுத்து உங்க பாட்டி இருந்த வீட்டுலே போயி உங்க அப்பாவைப் பாத்தேன்.

அந்தக் காலத்திலே நாங்கல்லாம் அதிகமா படிக்காததனாலே உடல் உழைப்பாலே வேலை செஞ்சோம். ஆனா இப்போ நீ நல்லா படிக்கற. நல்ல வேலைக்குப் போறீங்க. உங்க அப்பா கணேசன் நல்லா படிச்சிட்டு, நல்ல வேலையிலே இருக்காரு. நிறைய சம்பாதிக்கிறாரு. உங்க அப்பா மூளையாலே வேலை செய்யறாரு.

அந்தக் காலத்துக்கு ஏத்தா மாதிரி எங்களுக்கு அப்போ ஒரு மாதிரி டென்ஷன். இப்போ இவ்ளோ படிச்சிட்டு, வேலைக்குப் போற அவங்களுக்கு வேற மாதிரி டென்ஷன். அதுனாலே அப்பா வந்தவுடனே அவரைத் தொந்தரவு செய்யாமே அம்மாவுக்கும் அவருக்கும் உதவறா மாதிரி நடந்துக்கணும் புரியுதா எப்பிடி இருந்துது கதை” என்றார்.

ரம்யா ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருந்துது தாத்தா. நீங்க சொன்னா மதிரியே நானும் நல்லா படிக்கறேன். அப்பா அம்மாவுக்கு உதவறேன் என்றாள்.
அன்று மாலை அவருடைய மகன் கணேசன், உள்ளே நுழைந்து கைகால் முகம் கழுவிக்கொண்டு, அவனுடைய அறைக்குப் போனான். ராமநாதன் பேத்தியையே பார்த்துக்கொண்டிருந்தார். ரம்யா படித்துக்கொண்டிருந்தாள். கணேசனின் அறைக்குள்ளிருந்து அவருடைய மருமகள் குரல் மெலிதாகக் கேட்டது.

ஏங்க எல்லாரும் டாண்ணு மணி அஞ்சானவுடனே கிளம்பிடறாங்களாம் வீட்டுக்கு.நீங்க மட்டும் ஏன் இப்பிடி நேரம் காலம் பாக்காம உழைச்சு உடம்பைக் கெடுத்துக்கறீங்க எவ்ளோ சொன்னாலும் உங்களுக்குப் புரியறதே இல்லே
இந்தாங்க துண்டு முகத்தை துடைச்சிக்கங்க. இதோ நான் போயி காப்பி எடுத்திட்டு வரேன். குடிச்சிட்டு அமைதியா கொஞ்ச நேரம் டீவீ பாருங்க ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் உடம்பைப் பாத்துக்கங்க என்றாள்.

‘என்ன இது என்னிக்கும் இல்லாம இன்னிக்கு இவளுக்கு நம்ம மேல பாசம் பொத்துக்கிட்டு வருது ன்னு மனசுக்குள்ளே நெனைச்சாலும் சரிம்மா என்றான் அமைதியாக.
அம்மா அப்பா டயர்டா இருக்காரு தொந்தரவு செய்யாதே, அப்பாவுக்கு காபி குடு என்றாள் ரம்யா.
எப்பிடி பேசறா பாத்தீங்களா இவளைப் பெத்ததுக்கு ஒரு ஆம்பிளைப் புள்ளையைப் பெத்திருக்கலாம் என்றாள் பெத்துக்கோயேன் என்றாள் ரம்யா . ராமநாதன் புன்னகை பூத்தார்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *