51

  

அப்பா எப்பவுமே நீங்க சொல்றதைத்தான் நாங்க கேக்கணும்னு கிடையாது, நாங்களும் வளந்துட்டோம், நாங்க சொல்றதை இனிமே நீங்க கேளுங்கோ அம்மாவை திட்டிண்டே இருக்காதீங்கோ என்று கடுமையாகக் கூறிய மகன் தேசிகனை அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தார் ராமசேஷன்.

பதினெட்டு வயதில் 90 ரூபாய் சம்பளத்தில் ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து உழைத்தவர். வாழ்க்கையில் எதற்குமே கலங்காது எந்த நேரத்திலும் நிதானத்தைக் கைவிடாமல் காத்த பொறுமைசாலி . எவ்வளவோ கஷ்டங்களை எதிர்கொண்ட போதும் எப்பிடி இருக்கீங்க என்று கேட்கும் அனைவரிடமும் எல்லாப் ப்ரச்சனைகளோடும் நலமாக இருக்கிறேன் என்று புன்னகையுடன் கூறும் பக்குவம் உள்ள ராமசேஷன்.,
சிறிக சிறுக சேர்த்து பெற்றவர்களின் கடைசீக் காலம் வரை அவர்களை மனம் நோகாமல் இதமாக நடத்தி தந்தையார் இறந்த போதிலிருந்து கடைசீவரை தன் தாயார் மைதிலியை யாரிடமும் விடாமல் தானே பார்த்துக்கொண்டு கிட்டத்தட்ட நாற்பது ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தாயிற்று.
இது வரை யாரிடமும் எதற்காகவும் தலை குனிந்ததில்லை, யாசகம் கேட்டதில்லை மனசாட்சி தெய்வம் இரண்டைத் தவிர யாரிடமும் பயப்படாமல் வாழ்க்கையை கழித்தாயிற்று.

அந்தக் கஷ்டங்களின் நிழல்கூட மனைவி குழந்தைகளைத் தாக்காமல், தானே மொத்தப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டு இரு பெண் குழந்தைகளையும் ஒரு பிள்ளையையும் தன் சக்திக்கு மேலாக படிக்கவைத்து ஆளாக்கி ,பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து, பிள்ளைக்கும் அவன் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்து வைத்து பொறுப்புகளை வெற்றிகரமாக செயல் படுத்தியாயிற்று. இவருக்கு திருமணமாகி விளையாட்டு போல முப்பத்தாறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது,அவர் மனைவி மங்களத்துக்கு தெரியும் அவருடைய அந்தரங்கம்.

ராமசேஷனும் மங்களமும் இருவரும் திருமணநாளில் ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை சேவித்துவிட்டு வருகிறோம் என்று கிளம்பிப் போய் ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து அவர்களின் பிள்ளை தேசிகனுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டனர்.
தேசிகன் என்ன அம்மா தரிசனம் நன்றாக கிடைத்ததா? ரொம்ப அலையாதீங்கோ, வேளைக்கு சாப்டுக்கோங்கோ என்றான் கரிசனத்துடன். சரிடா இதோ போனை அப்பாகிட்ட குடுக்கறேன் என்று மங்களம் போனை ரமசேஷனிடம் கொடுத்தாள். அப்பா அம்மாவை ஜாக்கிரதையா பாத்து கூட்டிண்டுபோய்ட்டு வாங்கோ, அம்மாவை ஏதாவது சொல்லிண்டே இருக்காதீங்கோ,கொஞ்சம் இதமா நடந்துக்கோங்கோ என்றான் தேசிகன். .
ராமசேஷன் சரிப்பா நான் உங்க அம்மாவை ஒண்ணும் சொல்ல மாட்டேன்,பத்திரமா கூட்டிண்டு வரேன், நீங்க எல்லாரும் பத்திரமா இருங்கோ, என் பேரன் கிருஷ்ணனை பத்திரமா பாத்துக்கோங்கோ ரெண்டு பேரும் என்றார்.

அவருடைய மருமகள் தொலைபேசியில் வந்தாள் அப்பா அம்மா இங்கேநாங்க ரெண்டு பேரும் நன்னா இருக்கோம் உங்க பேரன் பண்ற லூட்டிதான் தாங்க முடியலை, தாத்தாபாட்டி எப்போவருவான்னு நச்சரிக்கறான் சீக்கிரம் தரிசனத்தையெல்லாம் முடிச்சிண்டு வாங்கோ என்றாள். சரிம்மா நாங்க நாளைக்கு வந்துடுவோம் சரி போனை வெச்சிடறேன் என்றார் ராமசேஷன்.

ராமசேஷனும் மங்களமும் ரொம்பக் கொடுத்து வெச்சவங்க நல்ல பிள்ளையைப் பெத்திருக்காங்க, எப்பவுமே மரியாதைக் குறைவா பேசாத அதிர்ந்து கூடப் பேசாத குணம் எல்லாருக்கும் நல்லது செய்யணும், நாட்டுக்கு ஏதாவது செய்யணும்கிற நல்ல எண்ணம் ,எல்லா உறவுக்காறங்ககிட்டேயும் அன்பாபாசமா பழகற பிள்ளை தேசிகன் . அந்தப் பையன் அமெரிக்காவிலே பெரிய கம்பனீலே பெரிய பதவீலே இருக்கான். ரொம்ப புத்திசாலி, வேலையிலே கெட்டிக்காரன், அப்பிடீன்னு அவன் வேலை செய்யிற கம்பனியிலேயே இவனுக்கு ரொம்ப மரியாதை தராங்க, என்று எல்லாரும் சொல்லும்போது ராமசேஷனுக்கு ரொம்ப இதமாவே இருந்துது மனசு, அவருக்கும் அவருடைய பிள்ளை தேசிகன் நேர்மையான நல்ல பிள்ளை என்று தெரியும் பாசமான பிள்ளைதான்.

ஆனாலும் கொஞ்ச நாளா அவன் மனசுலே என்ன இருக்குன்னு தெரிஞ்ச போது கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருந்துது, அவன் என்ன புரிஞ்சிண்டான்னே தெரியலை, ஒண்ணு புரியறது, இந்த மேல் சாவனிசம், பீமேல் சாவனிசம் இதெல்லாம் படிச்சிட்டு, பழங்காலத்திலே புருஷாள்ளாம் எப்படி பொண்டாட்டியை அடிமையா நடத்தி இருக்கா, எப்பிடி இவ்ளோ மோசமா நடந்துக்க அவாளுக்கு மனசு வந்துது இப்பிடியெல்லாம் அவர் காது பட பேசுவதைக் கேட்டிருக்கிறார்.

அது மட்டுமல்ல என் பொண்டாட்டியை நான் எனக்கு சரி சமானமா நடத்துவேன், அவளுக்கு உண்டான மரியாதையை குடுப்பேன், என்று கொள்கைப் பிடிப்போட நடந்துக்கிறான், இதெல்லாம் பெருமையாதான் இருக்கு. ஆனா கொஞ்ச நாளாவே ராமசேஷன் சொல்றது சரியாவே இருந்தாலும் பிடிவாதமா அதை மறுத்துட்டு, அப்பா சும்மா இருங்கோ உங்களுக்கு ஒணும் தெரியாது, அம்மா எது பண்ணாலும் குறை சொல்லுவேள் அது ஒண்ணுதான் தெரியறது உங்களுக்கு, அப்பிடீன்னு ஒரு நாள் பேசினதக் கேட்டவுடனே அதிர்ச்சியா இருந்துது ராமசேஷனுக்கு,

ஒண்ணு புரியறது அவன் குழந்தை இன்னும் இந்த வாழக்கையோட சூக்‌ஷுமத்தை சரியா புரிஞ்சிக்காத குழந்தை,அது மட்டுமில்லே இதமா பேசி அவா காரியத்தை நடத்திக்கறவா யாரு, காரியம் நடக்கணும்னா அதுக்கேத்த மாதிரி இச்சகம் பேசறவா யாரு எந்த ப்ரதிபலனும் எதிர்பாக்காம அவனோட நலத்தைப் பத்தி யோசிக்கறவா யாருன்னு இன்னும் புரியலை,அம்மாவை பத்திரமா பாத்துக்கணும் இல்லேங்கலை ஆனா நல்ல அப்பாவையும் புரிஞ்சுக்கணும் என்று ஒரு ஏக்கம் எழுந்தது அவருக்கு.

ஆனாலும் ஒரு திருப்தி தன்னோட காலத்துக்கு அப்புறம் அம்மாவை மனம் கோணாம அனபா நடத்துவான் அப்பிடீன்னு ஒரு திருப்தி. அதுனாலே அவன்கிட்ட ஒண்ணுமே பேசாம அப்பிடியே விட்டுட்டு சரிப்பா என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டார் ராமசேஷன் அனாவசியமா தேவையில்லாம அவன்கிட்ட பேசறதைக் கொஞ்சம் குறைச்சிண்டார், எதுக்கும் அவன்கிட்ட விவாதமே வளத்துக்கறதில்லே என்ற முடிவோட இன்னும் கொஞ்சம் இதமா இருக்க ஆரம்பித்தார் ராமசேஷன்.

ஸ்ரீரங்கத்திலேருந்து வந்து ப்ரசாதமெல்லம் குடுத்துட்டு அங்கே கோயில் வாசலில் இருந்து வாங்கி வந்த ரங்கநாதப் பெருமாள் பொம்மையை பேரன் கிருஷ்ணைடம் கொடுத்தார். மறு நாள் அவருடைய பேரன் கிருஷ்ணன் விளையாடிக்கொண்டிருந்தான், அவன் வழக்கமா விளையாடற கார் பொம்மை ஒரு பக்கம் உடைஞ்சு போயிருந்தது. அந்தக் கார் பொம்மையை அவனிடமிருந்து வாங்கி மேலே வைத்துவிட்டு நேத்துதானே சொன்னேன் இந்தக் கார் பொம்மையை எடுக்காதேன்னு கையைக் கிழிச்சுடும்னு , உங்க அம்மா எடுத்துக் குடுத்தாளா? இனிமே இந்தக் கார் பொம்மையை எடுத்தே அப்புறம் அடிச்சிருவேன் என்றான் தேசிகன்.

கிருஷ்ணன் அப்பாவை நிமிர்ந்து பாத்து அப்பா நானும் வளந்துட்டேன் எப்பவுமே நீங்க சொல்றதையே கேக்கணும்னு சொல்லாதீங்க ஹும் எனக்குத் தெரியும் எந்தப் பொம்மையை வெச்சிண்டு விளையாடணும்னு. நானேதான் எடுத்துண்டேன், அம்மா எடுத்துக் குடுக்கலை
ஏன் எல்லாத்துக்கும் அம்மாவைத் திட்றீங்க என்றான் தன் மழலை மாறாத குரலில். என் மருமகள் களுக்கென்று சிரித்தாள்.
ராமசேஷன் ஒன்றும் சொல்லவில்லை! அமைதியாக தேசிகனையே பார்த்துக்கொண்டிருந்தார். தேசிகன் தலைகுனிந்தான்.
சுபம்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book