16 ரத்து

 

 

இந்த மாமா யாரும்மா” என்ற அவள் மகன் கார்த்திக்கின் கேள்விக்குத் தடுமாறிய மாலினி, சுதாரித்துக்கொண்டு “கொஞ்சம் பொறு சொல்றேன். இந்த ஐஸ்க்ரீமை சாப்பிடு. சமத்துப் பையன் தானே நீ” என்றாள்.

எதிரே உட்கார்ந்துகொண்டு குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்த சரவணன் ஏன் குழந்தைகிட்ட சிடுசிடுக்கறே இதமா சொல்லேன் என்றான். ஹும் என்னான்னு சொல்ல மாமா இல்லேடான்னு சொல்லலாம். அப்புற இவரு யாருன்னு தொணதொணப்பானே. அப்போ என்னான்னு பதில் சொல்ல இவனும் உங்களை மாதிரிதான். சரியான பதில் கிடைக்காம விடமாட்டான். என்னான்னு சொல்றதுன்னு புரியாமத்தான் சிடுசிடுக்கறேன் என்றாள் மாலினி.

மாலினி, நீ இன்னமும் உன் சிடுசிடுப்பை விடவேயில்லையா கொஞ்சம் கூட மாறாம அப்பிடியே இருக்கே என்றான் சரவணன். “எதுக்கு சிடுசிடுக்கணுமோ அதுக்கு சிடுசிடுத்துத்தானே ஆகணும். அதை நான் செய்யாததாலேதான் இன்னிக்கு இந்த நிலைமைலே இருக்கேன்” என்றாள் மாலினி.
சரி இப்போவாவது புதுசா ஏதாவது பேசலாமா பழசையெல்லாம் மறந்துடலாமான்னு பேசறதுக்குதான் இங்கே வந்திருக்கோம். இனிமேயும் பழசையெல்லாம் நினைவு வெச்சிக்கலாமா, இல்லே மறந்துடலாமா ” என்றாள் மாலினி. நான் இப்போ பேசப்போறது நம்மோட பழைய கசப்பைப் பத்தி இல்லே. நாம ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்ச தப்பைப் பத்திப் பேசப் போறேன். அதுவும் இனிமே என்ன முடிவெடுக்கணும்னு புரிஞ்சிக்கத்தான். ஒரு ஐஞ்சு நிமிஷம் நான் பேசறேன். பொறுமையா கவனமா கேளு. அதுக்கப்புறம் நீ என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நான் கட்டுப்படறேன். அப்புறம் நீ எவ்வளவு நேரம் பேசினாலும் நான் பொறுமையா கேக்கறேன் என்றான் சரவணன்.

இதோ பாரு மாலினி. நாம காதலிச்சிதானே கல்யாணம் செஞ்சிகிட்டோம். அப்போ எவ்ளோ குதூகலமா இருந்துது, அதுக்கப்புறம் ஏன் நம்ம வாழ்க்கை சோபிக்கலை. இப்பவாவது புரிஞ்சுக்கோ . காதலிக்கும் போது நீயும் உன்னோட முன்கோபம் போல நிறைய விஷயங்களை மறைச்சிருப்பே. நானும் அது போல என்கிட்ட இருந்த கெட்ட குணங்களை மறைச்சிருப்பேன். ஆமாம் அந்த நேரத்திலே இருந்த ஈர்ப்பு நம்ம கண்ணை மறைச்சிருக்கலாம். ஆனா கல்யாணம் ஆனபிறகும் சினிமா கதாநாயகன், கதாநாயகி மாதிரி இருக்க முடியாது. ஒருநாள் இல்லேன்னா ஒரு நாள், நம்ப ரெண்டு பேரோட இயல்பும் தெரிஞ்சு போகும்.

ஆனா, அப்பிடித் தெரியறதுதான் வாழ்க்கை. அப்பவும் அதையெல்லாம் மறைச்சிண்டு வாழ்ந்தா அது வாழ்க்கையில்லை, துரோகம். அது மாதிரி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிண்டு எல்லார்கிட்டேயும் கெட்ட குணமும் இருக்கும் நல்ல குணமும் இருக்கு. எல்லாம் சேர்ந்த கலவைதான் மனிதர்கள் அப்பிடீங்கற யதார்த்தத்தை புரிஞ்சிக்கறதுதான் வாழ்க்கை. நாம் ரெண்டு பேருமே இந்த நிதர்சனத்தைப் புரிஞ்சிக்கலை. அதுனாலெதான் நம்ம வாழ்க்கை சீக்கிரமே கசந்து போச்சு. விவாகரத்தும் செஞ்சாச்சு.

உண்மையைச் சொல்லப் போனா எனக்கும் உனக்கும் சட்டப்படி எந்தச் சம்பந்தமும் இல்லே. இனிமே மறுபடியும் சம்பந்தம் ஏற்படுத்திக்கணுமா, வேண்டாமான்னு பேசி முடிவெடுக்கத்தான் இப்போ சந்திச்சிருக்கோம்.
“காதலிக்கும் போது ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாக்க மாட்டமான்னு ஏங்கறதும் பாத்தா நெகிழறதும் சகஜம். ஆனா கல்யாணத்துக்குப் பிறகு நான் பாத்தா நீயும் நீ பாத்தா நானும் எதுக்கு இப்போ முறைக்கறே அப்பிடீன்னு கேக்கறோம். காதலிக்கும் போது எதெல்லாம் நமக்கு கவர்ச்சியா இருந்துதோ அதெல்லாம் இப்போ குறையாத் தெரியுது. இந்த யதார்த்தத்தைப் புரிஞ்சிண்டாதான் வாழ்க்கை. எந்த ஒரு மனுஷன்கிட்டேயும் ஒரு மனுஷிகிட்டேயும் குறையே இல்லாமே இருக்காது. எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிண்டு வாழறதுதான் வாழ்க்கை. நமக்காக இல்லேன்னாலும் நம்ம குழந்தைகளுக்காகவாவது நாம அப்பிடி வாழ்ந்துதான் ஆகணும். அந்த யதார்த்தம் புரிஞ்சதாலேதானே இன்னிக்கு நம்ம குழந்தையோட எதிர்காலத்துக்காக மறுபடியும் ஒண்ணு சேருவோம் அப்பிடீன்னு யோசிக்கிறோம்.

“காதலிச்ச நாளிலேருந்து நீதான் அதிகமா பேசியிருக்கே. நான் கேட்டுண்டு இருந்திருக்கேன். அதான் இன்னிக்கு நான் அதிகமா பேசிட்டேன். நல்லா யோசிச்சு முடிவுக்கு வா! காதலிக்கும் போது அந்தப் பருவம் கவர்ச்சி எல்லாம் நம்ம ரெண்டு பேரையும் யோசிக்க விடலே. ஆனா நாம் ரெண்டு பேருமே இப்போ அனுபவப்பட்டவங்க. நல்லா யோசிச்சு முடிவு செய்யலாம். என்னதான் ஒரு ஆணோ ஒரு பெண்ணோ நான் இனிமே தனியா வாழ முடியும்ன்னு திமிர் பேசினாலும் ஆணும் சரி பெண்ணும் சரி அப்புறம் துணையில்லாமே வாழ முடியலைங்கறதுதான் உண்மை.
அதுனாலே நம்மோட நாகரிகத்தை, பாரம்பரியத்தைக் காப்பாத்தவும் முடியாமே, மேல்நாட்டு நாகரீகத்தை, பாரம்பரியத்தைப் பின்பற்றவும் முடியாமே ரெண்டாங்கெட்டான் வாழ்க்கை வாழ்ந்துண்டு ரெண்டு பேரும் தவிக்கறதுதான் வழக்கமா இருக்கு.

இன்னிக்கு நாம் எடுக்கப் போற முடிவுதான் முடிவு. ஆனா ஒரு விஷயம். நான் நானாத்தான் இருப்பேன். நீ நீயாவே இரு. காதலிக்கும்போது எதையெல்லாம் மறைச்சமோ அதையெல்லாம் இப்போ சகிச்சுக்க பழகணும். நம்மோட சுயம் ஜெயிக்கட்டும். அதுனாலே என்னை என்னோட சுயத்தோட ஏத்துக்கற மனப்பான்மை உனக்கிருந்தா, உன்னை உன்னோட சுயத்தோட ஏத்துக்கற மனப்பான்மை எனக்கும் இருந்தா, ஒண்ணா சேருவோம். இல்லேன்னா வேண்டாம். இனிமெ நாம் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிண்டு ஒத்துப் போகணும். காதல் வேற, கல்யாணம் வேற. இதைச் சரியா புரிஞ்சிக்கணும். இப்போ சொல்லு மறுபடியும் ஒண்ணா சேருவோமா?” என்று கேட்டுவிட்டு நிறுத்தினான் சரவணன்.

அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் மாலினி. கார்த்திக்கின் கையிலிருந்த ஐஸ்க்ரீம் உருகி, அவன் வாயெங்கும் வழிந்து அவன் சட்டையை நனைத்துக்கொண்டிருந்தது. அவன் வாயையும், அவன் சட்டையையும் துடைத்துவிட்டு, அவனை அணைத்துக்கொண்டு, அவன் காதில் ஏதோ சொன்னாள் மாலினி. கார்த்திக்கின் முகம் மலர்ந்தது.

“ஹை அப்பா! என்று ஓடிப்போய் சரவணனுக்கு ஒரு முத்தம் கொடுத்தான் கார்த்திக்

 

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *