38 ரத்த அழுத்தம்

 

ஏனோ தெரியவில்லை, சில நாட்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதிகம் சத்தம் போடுவதாக எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. என் மனைவியிடமும், பெண்களிடமும், பேரன்களிடமும் சத்தத்தைக் குறையுங்கள், இல்லையென்றால் சீக்கிரம் காது செவிடாகிவிடும்  என்று அலுத்துக்கொள்வது என் வழக்கமானது. படிக்க வேண்டிய வயதில் கல்வியை ஒழுங்காகக் கவனித்துப் படிக்காமல்,சதா சர்வ காலமும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னெ உட்கார்ந்து, உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொண்டு எதிர்காலத்தையே பாழாக்கிக்கொள்ளும் சிறுவர்களையும் சிறுமிகளையும் கண்டால் எரிச்சல் வருகிறது.

நல்ல தூக்கத்தில் மாடி வீட்டுக்காரர்கள் கதவை அறைந்து சாத்தினால் கோவம் வருகிறது. நாங்கள் வசிக்கும் தெருவில் நடிகர்களின் உபயத்தால் இரவு மணி பதினொன்றாகியும்  ரசிகர்களின் உற்சாக ஒலிபெருக்கிகள் போடும் திரைப்பாடல்களின் இரைச்சல் கேட்கும்போது. ஐயோ  உடல் நலம் சரியில்லாதவர்கள், குழந்தைகள்… போன்றோருக்கு இடைஞ்சலாக இருக்குமே  என்று தோன்றுகிறது.

தெருவிலே இளைஞர்கள் உற்சாக பானங்களை அருந்தி, அதன் விளைவால் அவர்கள்  போடும் தேவையில்லாத சத்தங்களையும் காது கொடுத்துக் கேட்க முடியாத நாராச வார்த்தைகளையும் கேட்டாலும் அவர்கள் ஓட்டும் இரு சக்கர வாகனங்கள் அதன் குரல் அமுக்குவானைப் பிடுங்கி விட்டதால் போடும் இரைச்சலும் ஆத்திரமூட்டுகின்றன.

அரசியல் கட்சிகள் உப்பு சப்பில்லாத, மக்களுக்கு ஒன்றுக்கும் உதவாத அவலங்களை மறைக்கப் போடும் ‘வாழ்க’ கோஷங்கள் கேட்டாலும் உடல் ஆத்திரத்தால் நடுங்குகிறது.

அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கே கஷ்டப்பட்டாலும், வீட்டிலே குழந்தையின் பசிக்குப் பால், பெரியவர்களின் பசிக்குச் சாதாரண உணவைக் கூட அளிக்க முடியாமல், தாங்கள் சம்பாதிக்கும் பொருளினால் சாராயத்தை வாங்கிக் குடித்துவிட்டு, போதையினால் தள்ளாடி மகா நடிகர்களின் உருவம் வரைந்த அட்டைகளுக்குப் பாலபிஷேகம் செய்யும் படித்த இளைஞர்கள் போடும் அறிவுத் தள்ளாட்டமும் எரிச்சலூட்டுகிறது.

நம் நாட்டின் பாரம்பரியமான ஆலயங்களின் சீரழிவு, அவற்றைச் சரியாகப் பராமரிக்காமல் நம்முடைய நாட்டின் பழம் பெரும் கலைகளையெல்லாம் கல்லாக, மண்ணாக  மாற்றி விற்று, தங்களின் சொந்தச் சொத்துகளாகச் சேர்த்துக்கொண்டிருக்கும் ஒப்பந்ததாரர்கள், அலுவலர்கள், பொறுப்பாளர்கள், அந்த ஆலயங்களுக்கு இருக்கும் சொத்தான நிலங்களிலிருந்து வரும் வருவாயைக் கூடத் தாங்களே  பங்கு போட்டுக்கொண்டு, அன்றாட நிர்வாகத்துக்கே வழியின்றி ஆண்டவனையே ஏமாற்றி, ஆண்டவனுக்குத் தொண்டு செய்யும் பக்தர்களையும் சாப்பாட்டுக்கே அலையவிடும்  அவலம் நினைத்தாலே எரிச்சலூட்டுகிறது.

நடக்கவே லாயக்கில்லாத சாலைகள், நடைபாதை, ஆங்காங்கே தொங்கும் ஆபத்தான மின்சார ஒயர்கள், பாதையின் நடு மத்தியில் இவர்களால்  போடப்பட்டிருக்கும் மீடியன்களிலிருந்து உடைந்து ஆங்காங்கே சாலையில் வீழ்ந்து கிடக்கும் கற்கள், எங்கு பார்த்தாலும் சாலையில் திரியும் மாடுகள், நாய்கள் அவைகளால் ஏற்படும் ஆபத்துகள், சுத்தமான  குடிநீரையும் கூட  பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியத்தில் மக்கள் நிலையைக் கண்டால் எரிச்சல் வருகிறது.

கொசு, மற்றும் சுகாதாரமின்மையினால் ஏற்படும் வியாதிகளால் பாதிக்கப்பட்டு, அவற்றிற்குச் சரியான மருத்துவ உதவிகள் கூடக் கிடைக்காத நிலையில் அலட்சியமான மருத்துவ மனைகள்… இவற்றையெல்லாம் பார்க்கும்போது  ரத்தம் கொதிக்கிறது.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் திரைப்படம் பார்க்க வரிசையில் நிற்கும் மக்கள், இவர்களைப் பார்த்தால் கோபம் வருகிறது. மீண்டும் மீண்டும் இலவசங்களுக்குப் பலியாகி, தங்களின் பொன்னான வாக்குகளின் மதிப்பே தெரியாமல் நடந்துகொள்ளும் மக்கள், தங்களுக்கும் தங்கள் நாட்டுக்கும்  தீமையைத் தேடிக்கொள்ளும்  அறிவாளிகளைப் பார்த்தாலும் கோபம் வருகிறது.

என் மூத்த பெண், ‘அப்பா, நீங்க போயி உங்க காதையும் அப்பிடியே உங்க ரத்த அழுத்ததையும் பரிசோதனை பண்ணிக்கோங்க’ என்றாள்.

பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது  நானா?

மனவியைத் திரும்பிப் பார்த்தேன். அவள் எதுவும் சொல்லாமல் ‘கம்’மென்றிருந்தாள்.

சுபம்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *